கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல்
பாகூர் : பாகூர் பகுதியில் அம்மை நோய் தாக்கி கால்நடைகள் இறந்து வருவதால், கால்நடை வளர்போர் அச்சமடைந்துள்ளனர்.பாகூர், குருவிநத்தம், இருளஞ்சந்தை உள்ளிட்ட கிராமங்களில் கால்நடைகள் அம்மை நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகின்றன.பாகூர், திருமால் நகரை சேர்ந்த வேலவன் 55; என்பவரின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு பசுவும் அதன் கன்றும் உயிரிழந்தன. 5 நாட்களுக்கு முன், மீண்டும் ஒரு பசுவும், கன்றும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தன. இதனால், கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர்.இது குறித்து பாகூர் கால்நடை மருத்துவர் அன்புசெல்வனிடம் கேட்டபோது, கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் அதிகரித்து வருவதால், மருந்துகளும், தடுப்பு ஊசிகளும் போடப்பட்டு வருகிறது. ஆனால், எந்த கால்நடைகளும் இறந்ததாக தகவல் இல்லை. நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.