கடலில் சுற்றுலா பயணிகள் இறங்குவதை தடுக்க நடவடிக்கை
புதுச்சேரி; புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, கடலில் சுற்றுலா பயணிகள் இறங்குவதை தடுக்க பாதுகாப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாடி மகிழ, ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் குவிந்து வருகின்றனர். இந்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான விடுதிகளின் அறைகள் நிரம்பி விட்டன.கடந்த சில மாதங்களுக்கு முன்னரே, நட்சத்திர ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் அறைகளை முன்பதிவு செய்து விட்டனர். அதேபோல, சாதாரண விடுதிகளிலும் முன்பதிவு முடிவடைந்து விட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்தே புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிய துவங்கி விட்டனர். தற்போது நாளுக்கு நாள் வருகை அதிகரித்து வருகிறது. இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு, 2 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் புதுச்சேரி நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க, தலைமை செயலகம் துவங்கி, டூப்ளக்ஸ் சிலை வரை மணல் பரப்பில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீச்சல் லைப் ஜாக்கெட் உள்ளிட்ட கவச உடைகளுடன் நீச்சல் பயிற்சி வீரர்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும், 2ம் தேதி வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.