உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தானிய வகை பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

தானிய வகை பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

வில்லியனுார்: வில்லியனுாரில் தானிய வகை பயிர் சாகுபடி செயவது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை,  பயிற்சி வழி தொடர்பு திட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் மூலம் மத்திய அரசின் திட்டமான ‘தானிய பயிர் வகைகளின் தற்சார்பு  திட்டம்’  புதுச்சேரியில் செயல்படுத்துவது குறித்து  விவசாயிகளிடம் கருத்து கேட்பு நிகழ்ச்சி உறுவையாறு சாய் பாபா கோவில் வளாகத்தில் நடந்தது.   கூட்டத்தில் வில்லியனூர் கோட்ட துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் வரவேற்றார்.  பயிற்சி வழி தொடர்பு திட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் செழியன் பாபு தலைமை தாங்கி,  திட்டத்தின் முக்கியத்துவம், புதுச்சேரி பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்தப்படும் முறைகள்,  விவசாயிகள் கிடைக்கப் பெறும் பலன்கள் குறித்து விரிவாக பேசினார்.  நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரவி, தானிய வகை பயிர்களின் சாகுபடியில் தொழில்நுட்பம் மற்றும் ரகங்களின் தேர்வு மற்றும் பயிர் மேலாண்மை குறித்து பேசினார்.  கூட்டத்தில் புதுச்சேரி அனைத்து உழவர் உதவியக வேளாண் அலுவலர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று  கருத்துக்களை தெரிவித்தனர். சான்றிதழ் பெற்ற  ‘வம்பன்-10’ உளுந்து விதைகள்,  காராமணிப் பயிறு விதைகள்,  அக்., மாதமே விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். மேலும்  திருக்கனூர் மற்றும் மதகடிப்பட்டு உழவர் உதவியக  விவசாயிகளுக்கு  காரமணிப் பயிறு விதைகள் கூடுதலாக கொடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று,  கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதகடிப்பட்டு வேளாண் அலுவலர் நடராஜன்  நன்றி கூறினார்.  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வில்லியனூர் உழவர் உதவியக வேளாண் அலுவலர் தினேஷ்குமார், உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் களப்பணியாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி