உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுாறடி சாலை மேம்பாலத்தில் மீண்டும் மெகா பள்ளங்கள்: வாகன ஓட்டிகள் அச்சம்

நுாறடி சாலை மேம்பாலத்தில் மீண்டும் மெகா பள்ளங்கள்: வாகன ஓட்டிகள் அச்சம்

நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் மீண்டும் சாலையில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டு, பல்லாங்குழி சாலையாக மாறி வருகிறது. பல கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட புதுச்சேரி நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை. கடந்த பல ஆண்டுகளாக இந்த மேம்பாலச் சாலையில் அடிக்கடி பள்ளங்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. இதுவரை நுாறடி சாலை மேம்பாலத்தில் 20க்கும் மேற்பட்ட முறை ராட்சத பள்ளங்கள் தோன்றி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியுள்ளன. மீண்டும் ரயில்வே மேம்பாலத்தில் மெகா பள்ளங்கள் உருவாகி, சாலை முழுதும் பல்லாங்குழி போலக் காட்சியளிக்கிறது. இதில் ஒரே ஒரு வித்தியாசம்... இதுவரை சிமெண்ட் சாலையாக இருந்த இடத்தில் பள்ளம் ஏற்படும். தற்போது மேம்பாலத்தின் நடுவே தார் சாலையில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டு அச்சுறுத்தி வருகிறது. இந்தப் பள்ளங்களால் மேம்பாலத்தைக் கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் பள்ளங்கள் சரிவரத் தெரியாததால், உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் நிலவுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒவ்வொரு முறையும் மரண பீதியுடனேயே மேம்பாலத்தைக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித் துறைக்குத் தெரியாத தொழில்நுட்பம் கிடையாது. மீண்டும் மீண்டும் பள்ளங்கள் ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இனிமேலாவது நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் ஒப்புக்கு பேட்ஜ் ஒர்க் செய்து காலம் கடத்தாமல், தரமான சாலையை அமைக்க கவர்னரும், முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nandakumar Naidu
நவ 21, 2026 18:33

யார் கண்ணும் படவில்லை, எந்த முறையில் செய்ய வேண்டுமோ அந்த முறையில் செய்யது தான் அதற்கு காரணம். தார்சாலையைப்போடும் போது அதனுடைய வெப்பம் 120° க்கு குறையாமல் இருக்க வேண்டும்,அதற்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். அப்படி சாலை போடும்போது தான் அந்த சாலை நிரந்தரமாக பத்தாண்டுகளுக்கு எதுவும் சேதம் அடையாமல் இருக்கும். இவர்கள் லாரிகளில் கொண்டு வரும்போதே அது குளிர்ந்த நிலையில் இருக்கிறது. அவ்வாறு குளிர்ந்த நிலையில் உள்ள தார் கலவையை போட்டால் இப்படித்தான் பல்லை இளிக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை