உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜி.எஸ்.டி., சட்ட திருத்தங்களுக்கு முழு ஆதரவு கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் தகவல்

ஜி.எஸ்.டி., சட்ட திருத்தங்களுக்கு முழு ஆதரவு கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் தகவல்

புதுச்சேரி : ஜி.எஸ்.டி., சட்ட திருத்தங்களுக்கு முழு ஆதரவை வழங்குவதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் புதுச்சேரி சார்பாக அமைச்சர் லட்சுமிநாராயணன், வணிக வரித்துறை துணை ஆணையர் ஆதர்ஷ், உதவி ஆணையர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது; வரி ஏய்ப்பு நடக்காத வகையில் கொண்டு வரப்பட உள்ள பல ஜி.எஸ்.டி., சட்ட திருத்தங்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். விடுதிகளில் அறைக்கு ஒரு நாள் ரூ. 7,500 வாடகை வசூலித்தால், அடுத்த நிதியாண்டில் இருந்து அவ்விடுதியில் உள்ள உணவகத்திற்கு 18 சதவீதம் வரி உயர்த்தி செலுத்த கவுன்சில் தற்போது பரிந்துரைத்துள்ளது. ரூ.7,500க்கு மேல் அறை வாடகை வசூலிக்கும் விடுதிகள் அனைத்தும் ஆடம்பர விடுதிகள் என எடுத்துக் கொள்ளக்கூடாது.விடுமுறை காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் கிராக்கி ஏற்படும்போது, அறை வாடகை ரூ. 7,500க்கு மேல் தாண்டுகிறது. சிறிய விடுதியாக இருந்தாலும் ஒரே அறையில் குடும்பமாக அல்லது குழுவாக தங்கும் போது அதற்கேற்ப அறையின் வாடகை ரூ. 7,500க்கு மேல் தாண்டுகிறது.எனவே, விடுதி உணவகத்தில் அருந்தும் உணவிற்கான வரி அறை வாடகையோடு தொடர்புபடுத்தி செலுத்தும் நிலையை முற்றிலும் நீக்க வேண்டும்.விமானங்களுக்கான எரிபொருளை (ஏ.டி.எப்) ஜி.எஸ்.டி., வரி வரம்பிற்குள் கொண்டு வரக்கோரும் விவாதத்தின்போது, ஏ.டி.எப்., மதிப்பு கூட்டு வரியின் (வாட்) கீழ் தொடரலாம் என்றும், புதுச்சேரி போன்ற சிறிய மாநிலத்திற்கு, வாட் வரி விதிப்பின் மூலம் விமான இணைப்பை மேம்படுத்த வழிவகுக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி