உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோதாவரி - காவிரி ஆறுகள் இணைப்பால் புதுச்சேரிக்கு 4.5 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

கோதாவரி - காவிரி ஆறுகள் இணைப்பால் புதுச்சேரிக்கு 4.5 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

புதுச்சேரி: சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:அசோக்பாபு(பா.ஜ.,): செல்லிப்பட்டு தடுப்பணை உடைந்து மழைநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் விவசாயிகள் பாதிக்கின்றனர். தடுப்பணையை துரிதமாக கட்ட திட்டம் அரசிடம் உள்ளதா. எப்போது தொடங்கி முடிக்கப்படும்.அமைச்சர் லட்சுமிநாராயணன்: செல்லிப்பட்டு உடைந்த படுகை அணை மறுகட்டமைப்பு செய்ய ரூ.20.40 கோடி மதிப்பீடு தயாரித்து அரசாணை பெறப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக மூன்று முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆற்றின் குறுக்கே உயர்மட்ட திருகு கதவுகளுடன் கூடிய தடுப்பணை கட்ட ஆலோசகர் நியமிக்கப்பட்டு, பணி நடந்து வருகிறது. இதன்மூலம் உபரிநீர் ஆற்றிலிருந்து வெளியேறுவது தடை செய்யப்பட்டு, அதிக தண்ணீர் சேமிக்கப்பட்டு, கோடை காலங்களில் அனைத்து தேவைகளுக்கும் தண்ணீர் பயன்படுத்தப்பட உள்ளது.அசோக்பாபு: இது விவசாயிகளின் நீண்ட கால பிரச்னை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. அப்பகுதியில் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். இந்த பிரச்னையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.லட்சுமிநாராயணன்: தொலை நோக்கு பார்வையால் திட்டம் தள்ளிபோகிறது. தற்போது செல்லிப்பட்டு தடுப்பணை 1.5 மீட்டர் உயரத்தில் தான் கட்டப்படுவதாக இருந்தது. இதன் மூலம் குறைந்த அளவு தான் தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.தற்போது செல்லிப்பட்டில் மினி அணையாக அதாவது பாரேஜ் கட்ட திட்டமிட்டுள்ளோம். இது 4.5 மீட்டர் உயரத்தில் இருக்கும். இதன் மூலம் தண்ணீரை அதிக அளவில் சேமிக்க முடியும். இது 90 சதவீதம் மத்திய அரசு நிதியில் கட்டப்படும். இதற்கு மத்திய அரசு அனுமதி விரைவில் பெற உள்ளோம். சங்கராபரணி ஆற்றில் மட்டுமின்றி, இதேபோல் தென் பெண்ணை ஆற்றிலும் மினி அணை கொண்டுவர உள்ளோம். கோதாவரி, காவிரி ஆறை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆறுகள் இணைப்பு மூலம் புதுச்சேரிக்கு 4.5 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும். அந்த தண்ணீர் வரும்போது அதையும் தேக்கும் வகையில் மாநிலத்தில் உயர்மட்ட கதவணைகளுடன் கூடிய மினி அணைகள் அவசியம் தேவை. அதனால் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லிப்பட்டில் மினி அணை கட்டப்பட உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ