இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
புதுச்சேரி: சைபர் குற்றங்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற 10 சைபர் கமாண்டோக்களுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சான்றிதழ் வழங்கினார்.இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டுப்பிடிக்கவும், அதனை தடுக்கவும் மத்திய அரசு உள்துறை அமைச்சகம் மூலம், தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து கமாண்டோ பதவி வழங்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, போலீஸ் துறையில், துணை கமிஷனர் பதவிக்கு கீழ் உள்ள போலீஸ் அதிகாரி முதல் கான்ஸ்டபிள் வரை சைபர் கிரைம் கமாண்டோ தேர்வை எழுதலாம். அதனடிப்படையில், கடந்தாண்டு அகில இந்திய அளவில் நடந்த கமாண்டோ தேர்வை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். அதில், கம்யூட்டரில் நுண் அறிவு பெற்ற 346 பேர் தேர்ச்சி அடைந்தனர்.அதில், தேர்ச்சி பெற்ற புதுச்சேரி போலீசார் 10 பேர், சென்னை, ஐ.ஐ.டி., கேரளா மாநிலம் கோட்டயம், ஐ.ஐ.டி., குஜராத் ஆர்.ஆர்.பி., ஆகிய நிறுவனங்களில் சைபர் பாதுகாப்பு, ஒயர்லஸ், இ.ஆர்.சி., தடயவியல் உள்ளிட்ட சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 6 மாதம் பயிற்சி முடித்த 10 கமாண்டோக்களுக்கு நேற்று டி.ஜி.பி., அலுவலகத்தில், சான்றிதழ் வழங்கப்பட்டது.உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சான்றிதழ் வழங்கி பேசுகையில், 'சைபர் கிரைம் போலீசில் கடந்த ஆண்டு வரை, 3,100 சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் வந்தன. அதில், 46 கோடி ரூபாய் பொதுமக்கள் பணத்தை ஏமாந்துள்ளனர். 10 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் சைபர் கிரைம் போலீஸ் துறையில் பொருட்கள் வாங்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.வி.ஜ.பி., பாதுகாப்பிற்காக, புதிய புல்லட் புரூப் கார் வாங்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் நடப்பதை தடுக்கவும், சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை தடுக்க இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீஸ் துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.நிகழ்ச்சியில், டி.ஜி.பி., ஷாலினி சிங், டி.ஐ.ஜி, சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள், நாரா சைதன்யா, கலைவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.