புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, தமிழ்வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்படும் என,அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த 2014-15ம் கல்வியாண்டு அரசு தொடக்க பள்ளிகளில் ஒன்றாம் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அடுத்தத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பு என, கடந்த 2018-19 ம் கல்வியாண்டில் 5ம் வகுப்பிற்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது 6ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1 மாநில பாடத்திட்டத்தில் இருந்து சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டன. மீதமுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளும் 2024-25 கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மாறிவிட்டன. அரசு பள்ளிகள் முழுமையாக சி.பி.எஸ்.இ., பள்ளி திட்டத்திற்கு மாற்றப்பட்டது. தமிழ் வழிக்கல்வி போதிக்கவில்லை. தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து, தமிழ் அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டன. இந்நிலையில், அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வி அமல்படுத்தப்படும் என, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது: ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதுவரை 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தகுதி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மிக விரைவில் ஆரம்ப கல்வியாசிரியர்கள் 190 பேர் நிரப்பப்பட உள்ளனர். சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் என கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்ப நடவடிக்கை எடுத்துக் கொண்டுள்ளோம். தாய்மொழி தமிழை போற்றும் வகையில் வெகு விரைவில் புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியை ஆரம்பிக்க இருக்கிறோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு துவங்கப்படும். மாநிலத்தில் கல்வியை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையையும் எடுத்துள்ளோம். விரைவில் பள்ளிகளில் 'ஸ்மார்ட் போர்டு' வைக்க உள்ளோம் என்றார். புதிய தேசிய கல்விக் கொள்கை, 1 முதல் 5ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்பிப்பதை ஊக்குவிக்கிறது. இதன்படியே புதுச்சேரி அரசு பள்ளிகளில், 1ம் முதல் 5ம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதெல்லாம் மொழிபெயர்க்கனும்.....
சி.பி.எஸ்.இ., ஒன்றாம் வகுப்பினை பொருத்தவரை தமிழ், ஆங்கிலம், கணிதம் கற்பிக்கப்படுகிறது. 3, 4, 5ம் வகுப்புகளை பொருத்தவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்கள் போதிக்கப்படுகிறது. எனவே கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டி இருக்கும். இது தொடர்பாக விரைவில் மத்திய இடைநிலை கல்வி வாரியத்துடன் புதுச்சேரி அரசு ஆலோசனை நடத்த உள்ளது.
மீண்டும் தழைக்கும் தமிழ் வழிக்கல்வி
புதுச்சேரியில் கடந்த 2014-15 ம் கல்வியாண்டு துவக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக அரசு பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. தமிழ்பாடத்தை மட்டுமே ஒரு பாடமாக படித்து தேர்வு எழுதினர். மற்ற பாடங்களை ஆங்கிலத்தில் எழுதினர். அதுவும் கடந்த 2024-25 கல்வியாண்டு பிறகு தமிழ்வழிக்கல்வி படிக்கும் மாணவர்களை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. அமைச்சரின் அறிவிப்பு மீண்டும் அரசு பள்ளிகளில் தமிழ் மொழியை தழைக்க வழிவகுத்துள்ளது.