அமைச்சர் தொகுதியில் பளபளக்கிறது மற்ற தொகுதிகளில் பல்லாங்குழி சாலைகள்
புதுச்சேரியின் அடையாளமாக இருந்தது பள்ளம் மேடுகள் இல்லாத தரமான வழுவழுப்பான சாலைகள். இது கடந்த 25 ஆண்டிற்கு முன்பு தமிழக மற்றும் வெளிமாநில மக்களால் அளித்த சான்றிதழ்.ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தமிழகத்தில் சாலைகள் தரமானதாகவும், புதுச்சேரி சாலைகள் தரமற்றதாக மாறிவிட்டது. சாலை அமைத்த ஓரிரு மாதத்தில் ஜல்லி பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது.இதற்கு முக்கிய காரணம், தரமற்ற தார். தார் கலவை வெப்பம் குறைவாக இருப்பது, சரியாக ரோடு ரோலர் மூலம் சமன்படுத்தாமல் அவசர கதியில் பணிகளை முடிப்பது. சாலையின் தரத்தை ஒவ்வொரு நிலையிலும் கவனிக்காததும் முக்கிய காரணம். கடந்த ஒராண்டிற்கு முன் போடப்பட்ட கடலுார் சாலையில் முதலியார்பட்டை, மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், பிள்ளையார்குப்பம் வரை சாலை குண்டும் குழியுமாக மாறியதுடன், பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து கிடக்கிறது.ஆனால், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனின் ராஜ்பவன் தொகுதியில், சாலைகள் வழு வழுப்பாக தரமாக அமைத்துள்ளனர். ஒயிட் டவுன் ஏரியாவில் சின்னஞ்சிறிய பள்ளம் கூட இன்றி சாலை போடப்பட்டுள்ளது.இதுபோல் முதல்வர் ரங்கசாமியின் தட்டாஞ்சாவடி தொகுதி, கதிர்காமம், இந்திரா நகர் தொகுதியில் சாலைகள் தரமாக உள்ளது. மற்ற தொகுதி மற்றும் நெடுஞ்சாலைகள் தரமற்ற முறையில் இருப்பது ஏன். அமைச்சர் தொகுதியிலும் மற்ற இடங்களில் சாலை அமைக்க டெண்டர் எடுக்கும் ஒரே நிறுவனம் இரு வேறு இடத்தில் இரு விதமாக சாலை அமைப்பது விந்தையாக உள்ளது.5 ஆண்டுகள் வரை பராமரிப்புடன் சாலை அமைக்கப்பட்டு இருப்பதால், சேதமானை அனைத்து சாலைகளையும் டெண்டர் எடுத்த நிறுவனமே மீண்டும் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக போடப்பட்ட கடலுார் சாலை உள்ளிட்ட சாலைகளை முதல்வர் ரங்கசாமி நேரடியாக பார்வையிட்டு தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்.