அரசு பள்ளி மாணவர்களை சுற்றுலா அனுப்பிய எம்.எல்.ஏ.,
பாகூர் தொகுதி, கீழ்பரிக்கல்பட்டு அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற செந்தில்குமார் எம்.எல்.ஏ., 10ம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, 'மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால், சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்திருந்தார்.இந்நிலையில், கடந்த 13ம் தேதி தேர்வு முடிவு வெளியான நிலையில், கீழ்பரிக்கல்பட்டு அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.இதையடுத்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ., தான் கூறியதுபோல், தனது சொந்த செலவில், மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் என, 34 பேரை தனி வாகனத்தில் ஊட்டிக்கு சுற்றுலா அனுப்பி வைத்தார். இந்த பயணத்தில், மாணவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், தொட்ட பெட்டா, படகு இல்லம், அரசு அருங்காட்சியகம், தேயிலை தொழிற்சாலை போன்ற முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். இது மாணவர்களின் மனச்சோர்வுக்கும், கற்றல் அறிவுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.