மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை எம்.எல்.ஏ., முற்றுகையிட்டதால் பரபரப்பு
புதுச்சேரி: பத்திரப்பதிவு துறையில் நடக்கும் ஊழல்களை கண்டித்து நேரு எம்.எல்.ஏ., மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி அரசின் பத்திரப்பதிவு துறையில் ஊழல், போலி பத்திரங்கள்பதிவு செய்தலை கண்டித்து, சாரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை நேரு எம்.எல்.ஏ., மற்றும் பொதுநல அமைப்பினர் நேற்று காலை 11:00 மணியளவில் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.அலுவலகத்திற்குள் புகுந்து, மாவட்ட பதிவாளர் எங்கே என கேட்டு, தரையில் அமர்ந்துதர்ணாவில் ஈடுபட்டனர்.தகவலறிந்த உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம்பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.நேரு எம்.எல்.ஏ., கூறுகையில்,'முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த விதவை பெண்ணின் மகன்கள் அஸ்வின், சுந்தர் மற்றும் அனுராஜ் ஆகியோரின் 5 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரிக்க முயன்று வருகின்றனர்.அவர்கள் சொத்துக்கு உரியவர்களை போனில் தொடர்பு கொண்டு மிரட்டி இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் சார் பதிவாளரிடம் முறையிட்டபோது, சரியாக பதில் அளிக்கவில்லை. மாவட்ட பதிவாளரிடம் புகார் மனு அளித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை.அவர், முறைகேடுகளுக்கு துணை போவதாக புகார் எழுந்துள்ளது.அவர் மீதான முறைகேடுகளை விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான குழு அமைக்க வேண்டும்.தகுதியான அதிகாரியை மாவட்ட பதிவாளராக நியமிக்க வேண்டும் என கவர்னர், முதல்வர் மற்றும் கலெக்டர் ஆகியோருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.