உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நில அளவைப் பணிகளில் நவீன தொழில்நுட்பம்: புதிய சீர்திருத்தங்கள் அறிவிப்பு

நில அளவைப் பணிகளில் நவீன தொழில்நுட்பம்: புதிய சீர்திருத்தங்கள் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நில அளவைப் பணிகளை விரைவாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ளும் வகையில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை பல்வேறு புதிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் இயங்கும் நில அளவை மற்றும் நில ஆவணங்கள் இயக்ககம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொதுவாக நிலம் வாங்குவது, விற்பது, கட்டடம் கட்டுவது, நிலத்தின் எல்லைகளை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு நில அளவை முக்கியமானதாக உள்ளது. நிலத்தின் எல்லை தொடர்பான பிரச்னைகளை தவிர்க்கவும், உரிமையாளர்களின் நில அளவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் துல்லியமான அளவீடுகள் அவசியமாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, நில அளவைப் பணிகளை நவீனப்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப சேவைகளை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நடைமுறையைத் தொடர்ந்து, நில அளவைப் பணிகளில் பாரம்பரிய சங்கிலி அளவை முறையுடன் நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. மின்னணு மொத்த நிலையக் கருவி, தொடர்ச்சியான செயல்பாட்டு குறிப்பு நிலையங்கள், வேறுபாட்டு உலகளாவிய நிலைநிறுத்த முறை ஆகிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் நில அளவீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் நிலங்களின் அளவைப் பணிகளை விரைவாக முடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிலத்தின் அளவுக்கு ஏற்ப கட்டணம்: நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கான கட்டணங்களும் நிலத்தின் பரப்பளவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 5,000 சதுர அடிக்குக் குறைவான நிலங்களுக்கு ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.400 கட்டணமாக வசூலிக்கப்படும். 5,000 முதல் 10,000 சதுர அடி வரையிலான நிலங்களுக்கு ரூ.600, 10,000 முதல் 20,000 சதுர அடி வரை ரூ.800, 20,000 முதல் 30,000 சதுர அடி வரை ரூ.1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 30,000 சதுர அடிக்கு மேற்பட்ட நிலங்களுக்கு ரூ.1,300 கட்டணமாக வசூலிக்கப்படும். ஒரு ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களுக்கு, ஒவ்வொரு கூடுதல் 10 ஏக்கருக்கும் ரூ.200 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். சேவைக் கட்டண விவரங்கள்: தனிநபர்கள் மற்றும் பொதுமக்கள் நில அளவைச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான கால அடிப்படையிலான கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 26 வேலை நாட்களைக் கொண்ட மாதாந்திர சேவைக்கு ரூ.25 ஆயிரம், 6 வேலை நாட்களைக் கொண்ட வாராந்திர சேவைக்கு ரூ.5 ஆயிரம், ஒரு நாள் சேவைக்கு ரூ.1,000ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை புதுச்சேரி அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான https://puducherry-dt.gov.in மற்றும் https://revenue.py.gov.in ஆகியவற்றில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். உரிமம் பெற்றவர்களுக்கு... உரிமம் பெற்ற நில அளவையாளர்கள் மற்றும் நில வரைபட வரைவாளர்கள் தங்களது பணிகளை முறையான பதிவேடுகள் மற்றும் ஆவணங்களுடன் மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. நில அளவைப் பணிகளின்போது அரசு நிர்ணயித்துள்ள நடைமுறைகள் மற்றும் கட்டண விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுவதுடன், பொதுமக்களுக்கு உரிய காலத்தில் சேவைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தனிப்பட்ட முறையிலும், அரசு நிறுவனங்கள் தங்களது தேவைகளுக்காகவும் உரிமம் பெற்ற நில அளவையாளர்கள் மற்றும் நில வரைபட வரைவாளர்களின் சேவைகளை நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !