மருத்துவ சேவையில் கிராமப்புறங்களில் அதிக கவனம் தேவை : கவர்னர் அறிவுரை
பாகூர்; மருத்துவ சேவைக்கு கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தினார்.கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யா பீத் நிகர்நிலை பல்கலை கழகத்தில் நடந்த சர்வதேச சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி மாநாட்டை துவக்கி வைத்து, கவர்னர் பேசியதாவது:தொற்று நோய்கள் முதல், காலநிலை மாற்ற அச்சுறுத்தல்கள் வரை உலகம் தொடர்ச்சியாக பல புதிய மருத்துவ சவால்களை எதிர்கொண்டு வருகிறது. மருத்துவ சேவையில் புதுமை என்பது, மருந்துகள் அல்லது அதிநவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடிப்பது மட்டுமே அல்ல. அது மருத்துவ சேவை வழங்கும் முறையை மாற்றி அமைப்பதாகவும் இருக்க வேண்டும்.ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த செலவில் பயன் தருவதாக அதை மாற்ற வேண்டும். கொரணாவிற்கு எதிரான போராட்டத்தில், உலக நாடுகளில் உள்ள அரசுகள், மருத்துவமனைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் ஒன்றுபட்ட உழைப்பை வெளிப்படுத்தியது.இதனால், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதனை பயன்படுத்தி உலகம் முழுதும் பல லட்ச கணக்கான உயிர்களை காப்பாற்ற முடிந்தது. சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் முறை நோய்களிலிருந்து, மக்களே தங்களை பாதுகாத்துகொள்ள தொடங்கினர். முழுமையான மருத்துவ சேவைக்கு கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஏழ்மை அல்லது நடுத்தர மக்கள் உள்ள வளர்ந்து வரும் நாடுகளில், தரமான மருத்துவ சிகிச்சை பெரும் சவாலாகவே இருக்கிறது. புதுச்சேரியில் 9 மருத்துவ கல்லுாரிகள் இருப்பதை நாம் சரியாக பயன்படுத்தி, புதுச்சேரி மாநிலத்தை ஒரு மருத்துவ மையமாக உருவாக்க முடியும். அடுத்த 5 ஆண்டுகளில், புதுச்சேரி மருத்துவ சேவை மையமாக வளரும் என்று நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.