காரைக்கால், : திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் அர்ச்சகர் வீட்டில் 20 சவரன் நகை திருடிய மாமியார், மருமகனை ஏழு மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால், திருநள்ளாறு, பெருமாள் கோவில் சன்னதி தெருவில் வசிப்பவர் ரோகிணி, 60; சனீஸ்வர பகவான் கோவில் அர்ச்சகர். இவரது வீட்டிற்கு கடந்த ஆண்டு மே.,10ம் தேதி 50 வயது பெண் மற்றும் வாலிபர் ஒருவர் வந்தனர். அப்பெண், தன்னுடன் வந்தவரை தனது மகன் வெங்கடேஷ், 30; என, அறிமுகம் செய்து, மகனை சாமி தரிசனம் செய்து வைத்தால், திருமணம் ஆகிவிடும் என, கூறியுள்ளார்.பின், அவர்கள், தங்குவதற்கு ரூம் கிடைக்கவில்லை; இன்று இரவு உங்கள் வீட்டிலேயே தங்கி, காலையில் சாமி தரினம் செய்து விட்டு செல்கிறோம் என, கூறினர். அதை நம்பிய ரோகிணி, இருவரையும் வீட்டில் தங்க வைத்து இரவு ஓட்டலில் டிபன் வாங்கி வந்து கொடுத்தார்.மறுநாள் அதிகாலையில் ரோகிணி எழுந்து பார்த்தபோது இருவரையும் காணவில்லை. படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், 1.40 லட்சம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ரோகிணி அளித்த புகாரில், திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.அதில், சென்னை போரூர் பகுதியை சேர்ந்த சோபனா (எ) சுப்புலட்சுமி, 63; அவரது மருமகன் பெரம்பலுார் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வேலாயுதம், 36; ஆகியோர் தாய், மகன் என நடித்து ரோகிணிக்கும், அவரது மனைவிக்கும் சாம்பாரில் துாக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டு, பீரோவை உடைத்து நகை, மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து, அவர்களிடம் இருந்து 13 சவரன் நகை மற்றும் பைக் ஆகியற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். இவர்கள் இருவர் மீதும் தமிழகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.