மதகடிப்பட்டு சாலை மோசம் வாகன ஓட்டிகள் அவதி
புதுச்சேரி: சூரமங்கலம் – மதகடிப்பட்டு சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மதகடிப்பட்டு மருத்துவ கல்லுாரி, மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. மதகடிப்பட்டில் இருந்து மடுகரை செல்லும் சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக மாறியுள்ளது. சுற்றுவட்டார கிராமங்களை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சாலை குண்டும் குழியுமாக மாறி, மழைக்காலங்களில் குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகின்றனர். இச்சாலையில் பயணிக்கும் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் அவசர மருத்துவச் சிகிச்சைக்காக செல்வோர் கடும் உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். சாலையில் மின் விளக்குகளும் இல்லாததால், இரவு நேரத்தில் உயிர் பயத்திலே வாகன ஓட்டிகள் இச்சாலையை கடக்கின்றனர். எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.