எம்.எஸ்.எம்.இ., நிறுவன தர சான்றிதழ் விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி: புதுச்சேரி பிப்டிக் சார்பில் ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (எம்.எஸ்.எம்.இ) நிறுவனங்களுக்கான தரச் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு மற்றும் தரச் சான்றிதழில் எரிசக்தி, நீர் தணிக்கைகளின் முக்கியத்துவம்’ தலைப்பிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடந்தது. தேசிய உற்பத்தித்திறன் குழுமத்தின் துணை இயக்குநர் விஜயராஜு வரவேற்றார். காரைக்கால் நீர்பிளாஸ்ட் நிறுவனத்தின் சக்திவேல், புதுச்சேரி லகு உத்யோக் பாரதி சங்கத்தின் தலைவர் விஸ்வேஸ்வரன், சுரேஷ் பாபு மற்றும் பிப்டிக் ஆலோசகர் தினேஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கான தரச் சான்றிதழ் மற்றும் தணிக்கைச் சூழலமைப்பு, நீர் - எரிசக்தி தணிக்கை, தணிக்கையின் வகைகள், எளிதில் செயல்படுத்தக்கூடிய தீர்வுகளைக் கண்டறிதல், வழிமுறைகள் மற்றும் அணுகுமுறை, பசுமை இல்ல வாயு கணக்கீடு ஆகியவை குறித்தும், நீர் மற்றும் எரிசக்தி தணிக்கையின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஒ.என்.ஜி.சி., போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள விற்பனையாளர் வாய்ப்புகள் மற்றும் ஜெம் போர்ட்டலில் உள்ள வாய்ப்புகள் குறித்து காவிரிப் படுகை ஒ.என்.ஜி.சி., நிறுவனத்தின் செயல் பொறியாளர் கிரிஷ் விளக்கம் அளித்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 45 எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பங்கேற்று, தரச் சான்றிதழ், நீர் - எரிசக்தி தணிக்கை மற்றும் தங்கள் நிறுவனங்களில் நீர், எரிசக்தி பயன்பாட்டை சுய மதிப்பீடு செய்தல் ஆகியவை குறித்த நடைமுறை நுண்ணறிவுகளைப் பெற்றன. திட்ட உதவியாளர் அருண் நன்றி கூறினார்.