துாய்மை கணக்கெடுப்பு பணியை கவனமாக கையாளும் நகராட்சி நிர்வாகம்
நாடும் முழுதும் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சுகாதாரப் பணிகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்து, ஸ்வச் சர்வேக் ஷன் விருது தர வரிசைப்படி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருது பெறும் மாநிலங்களுக்கு சுகாதார பணிகளுக்காக கூடுதல் நிதியை மத்திய அமைச்சகம் வழங்குகிறது. துாய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) இயக்கத்தின் சார்பில், புதுச்சேரி நகராட்சியில் குப்பைகளை அகற்றுவது, குப்பைகளை மறுசுழற்சி செய்வது, கழிவு நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது.பொதுக்கழிவறைகள், சமுதாய கழிவறைகள் சுகாதாரமாக பராமரிப்பது. வாய்க்கால்களை துார் வாருவது, வீதிகள், சாலைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.இவற்றை ஆய்வு செய்து தரவரிசைபடுத்தும் பணி புதுச்சேரி நகராட்சியில் நேற்று முன்தினம் முதல் துவங்கியது. தனியார் நிறுவன மேற்பார்வையாளர் ஆல்பர்ட் ராஜ் தலைமையில் ஆறு பேர் கொண்ட கள ஆய்வாளர்கள் புதுச்சேரியில் உள்ள 33 வார்டுகளில் துாய்மை கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.இதேபோல், உழவர்கரை நகராட்சி, காரைக்கால், மாகே, ஏனாம் வார்டுகளில் இந்த கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. கடந்த ஆண்டு இதேபோன்று கணக்கெடுப்பு பணிக்கு வந்தவர்களை புதுச்சேரி நகராட்சி ஊழியர் ஒருவர் அலட்சியமாக கையாண்டதால் கணக்கெடுப்பு பணியே சரியாக நடத்தப்படாமல் புதுச்சேரி மாநிலம் தரவரிசை பட்டியலில் பின்னோக்கி சென்றது.அதனால் அதிர்ச்சி அடைந்த உள்ளாட்சி துறை இயக்குனர் அந்த ஊழியரை சஸ்பெண்ட் செய்தார். இதையடுத்து, இந்த ஆண்டு துாய்மை கணக்கெடுப்பு பணியை நகராட்சி அதிகாரிகள் கவனமாக கையாண்டு வருகின்றனர்.