உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறைச்சி கடைகளுக்கு நகராட்சி எச்சரிக்கை

இறைச்சி கடைகளுக்கு நகராட்சி எச்சரிக்கை

புதுச்சேரி: சாலையோரம் கடை அமைத்து, பொதுமக்கள் பார்வையில் படுமாறு, ஆடு மற்றும் கோழிகளை அறுத்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, உழவர்கரை நகராட்சி எச்சரித்துள்ளது. நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு; உழவர்கரை நகராட்சி பகுதிகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் அதிக அளவில் உள்ளது. பண்டிகை நாட்களில் கூடுதலாக திறக்கப்படும் இறைச்சி கடைகளில், சாலையோரம் ஆடு, கோழிகள் இறைச்சிக்காக பொதுமக்கள் பார்வையில் படுமாறு அறுக்கப்பட்டு, அதன் கழிவுகள் சாலையோர வாய்கால்களில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று நகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளை ஆய்வு செய்ய உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு இறைச்சி கடைகளை ஆய்வு செய்யும்போது, சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கடைகள் வைக்கப்பட்டு இருந்தாலோ, பொதுமக்கள் பார்வையில் படுமாறு ஆடு மற்றும் கோழிகளை அறுத்தாலோ அவைகள் பறிமுதல் செய்வதுடன் கடை உரிமையாளர்கள் மீது, நகராட்சி விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். இறைச்சி கழிவுகளை கால்வாய், சாலையோரங்களில் கொட்டாமல் அதனை சேகரித்து துப்புறவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொதுமக்கள் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் இறைச்சியை வாங்க வேண்டாம். இறைச்சி வாங்க வீட்டில் உள்ள துணிப்பைகள் மற்றும் பாத்திரங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ