| ADDED : செப் 10, 2026 07:03 PM
புதுச்சேரி: தலைமை செயலகம் எதிரே கடலில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மர்ம பொருளை திறந்தபோது காலியாக இருந்தது. புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடற்கரையில், உருளை வடிவிலான மர்ம பொருள் ஒன்று கடந்த 7ம் தேதி மாலை கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியது. இதையடுத்து, கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மர்ம பொருளைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், கரையொதுங்கிய பொருள் பிளாஸ்டிக் டிரம் போன்றும், அதன் இருபுறமும் பாதுகாப்புக்காக இரும்புப் பட்டைகள் மற்றும் வளையங்களால் வெல்டிங் செய்யப்பட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. மேலும், அதன் ஒருபகுதியில் சிறிய துளை (ஓட்டை) இருப்பதும் தெரியவந்தது. அந்த பொருள் மாநில கடலோர காவல்படை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த மர்ம பொருள் நேற்று இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கண்ணன், பிரபாகரன், புதுச்சேரி மீன்வளத்துறை சப் இன்ஸ்பெக்டர் சைமன் லியோ, மாநில கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் திறந்து பார்க்கப்பட்டது. அதில், பிளாஸ்டிக் பொருள் காலியாக இருந்தது. இதுகுறித்து கடலோர காவல் படையினர் விசாரித்து வருகின்றனர்.