புதுச்சேரி பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு பாரபட்சம் முழு சந்திரமுகியாக முதல்வர் மாற வேண்டும் நாஜிம் எம்.எல்.ஏ., ஆவேசம்
புதுச்சேரி : சட்டசபை கேள்வி நேரத்தின்போது புதுச்சேரி பி.சி.எஸ்., அதிகாரிகளின் பதவி உயர்வு சம்பந்தமாக விவாதம் நடந்தது.நாஜிம் எம்.எல்.ஏ.,: பல ஆண்டுகளாக பி.சி.எஸ் அதிகாரிகள் பொறுப்பு அடிப்படையில் தான் பணியாற்றுகின்றனர். அவர்களை அடாக் அடிப்படையில் ஏன் பதவி உயர்வு கொடுக்கவில்லை. புதுச்சேரியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவற்றை செய்து கொள்கின்றனர். ஆனால் புதுச்சேரி மண்ணின் அதிகாரிகளுக்கான பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு ஏதும் செய்து கொடுப்பதில்லை. குறைந்தபட்சம் அடாக் அடிப்படையில் எந்த பதவி உயர்வு அளிப்பதில்லை. புதுச்சேரி அதிகாரிகளும் உங்களை நேசிக்கின்றனர். ஏற்கனவே நீங்கள் தான் அவர்களுக்கு அடாக் அடிப்படையில் பதவி உயர்வு கொடுத்தீர்கள். இப்போது பாரபட்சம் பார்க்கப்படுகின்றது. இதில் முதல்வர் ரங்கசாமி தலையிட்டு முழு சந்திரமுகியாக மாற வேண்டும்.முதல்வர் ரங்கசாமி: புதுச்சேரியில் கடந்த 1967 இல் 62 பி.சி.எஸ்., பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இப்போது 94 பணியிடங்களாக அதிகரிக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகமும் விரைவில் ஒப்புதல் அளிக்கும். உள்துறை ஒப்புதலுக்கு பிறகு நேரடி காலியிடங்கள் நிரப்ப மத்திய தேர்வாணையத்திற்கு அனுப்பப்படும். புதுச்சேரியில் சி.டி.சி., எனப்படும் பொறுப்பு அடிப்படையில் 18 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இதில் இரண்டு அதிகாரிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவும், 16 அதிகாரிகள் ஓராண்டுக்கு மேலாகவும் பணியாற்றுகின்றனர்.சி.டி.சி., அடிப்படையில் பதவி உயர்வு கிடைத்தாலும் அவர்களது பணிகாலம் கவனத்தில் கொள்ளுவதில்லை. அடாக் அடிப்படையில் கொடுத்தால் தான் பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு நல்லது. ஆனால் முன்பு இருந்த தலைமை செயலர் சி.டி.சி., யில் பதவி கொடுத்தார். அதை பின்பற்றி அடுத்து வரும் தலைமை செயலர்களும் இப்படி செய்கின்றனர். அடாக் அடிப்படையில் பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இது தொடர்பாக கவர்னர், தலைமை செயலரிடம் தெரிவித்து அடாக் அடிப்படையில் அனைத்து பதவி உயர்வுகளும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.