காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்., சார்பில் போட்டியிடும் விநாயகத்தை ஆதரித்து வி.வி.பி., நகரில் நேரு எம்.எல்.ஏ., வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில், காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து,நேயம் மக்கள் கழக தலைவரும், உருளையான்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு, தொகுதிக்குட்பட்ட வி.வி.பி., நகர், கோரிமேடு மெயின் ரோடு பகுதியில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது வேட்பாளர், வி.வி.பி., நகரில் உள்ள முன்னாள் எம்.பி., ராமதாசிடம் ஆசி பெற்றார். அவர், பேசுகையில், 'புதுச்சேரியில் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், தினம் ஒரு அசம்பாவித சம்பவம் நடக்கிறது.தினந்தோறும் கொலை, விபத்து நடக்கிறது. இவைகளுக்கு தீர்வு காண தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்காக சட்டசபையில் குரல் கொடுத்திட நடைபெற உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிஇடைத்தேர்தலில், விநாயகத்திற்கு கை சின்னத்தில் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும். அவர், வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றால், தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்கு அரசு மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் பெற்று தருவார். தற்போது உங்களை நாடி வருபவர்கள், பணத்தை காட்டி ஆசை காட்டுவார்கள், மக்களே சிந்தியுங்கள்,பணம் வேண்டுமா உங்களுக்காக உழைக்கக்கூடிய, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் வேண்டுமா. தட்டாஞ்சாவடி தொகுதி மக்களே உங்களுக்காக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி களப்பணியில் ஈடுபடும் விநாயகத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்காக அவருக்கு கை சின்னத்தில் ஓட்டுப்போட்டு அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார். மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.