ரயில் மறியல் போராட்டம் நேரு எம்.எல்.ஏ., அறிவிப்பு
புதுச்சேரி: ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கப்படாதை கண்டித்து, ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, நேரு எம்.எல்.ஏ., அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கடலுார் சாலை, ரோடியர் மில், புவன்கரே வீதி ரயில்வே கேட் பகுதிகளில் ரயில்வே துறை சார்பாக பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றது. பணி முடிந்த நிலையில் ரயில்வே தண்டவாள பகுதியை ஒட்டியிருக்கும் ரயில்வே கிராசிங் சாலை பகுதிகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த ரயில்வே கேட் பகுதியை கடக்கும்போது கீழே விழுந்து பாதிப்புக்குள்ளாவது அதிகரித்துள்ளது. இதனால், அப்பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.ரயில் போக்குவரத்து நேரங்களில் கேட் மூடப்பட்டு மீண்டும் திறக்கும்போது நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் போக்குவரத்து தடைபடுகிறது. அதன் அருகே தற்காலிக பஸ் ஸ்டாண்டு செயல்படுவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் உச்சக்கட்டத்தில் உள்ளது.அப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் பணியில் இருப்பதில்லை. இதை காவல்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பத கண்டிக்கத்தக்கது.எனவே, உடனடியாக போக்குவரத்து காவல்துறை மற்றும் ரயில்வே துறை இணைந்து, ரயில்வே கேட் பகுதியில் குண்டும், குழியுமான சாலை பகுதியை சீர் செய்ய வேண்டும். தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டால், பொதுநல அமைப்புகள் சார்பில், பொதுமக்களை திரட்டி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.