புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் நாளை மறுநாள் 2ம் தேதி பதவி ஏற்பு மத்திய உள்துறை அமைச்சக அறிவிப்பு இன்று வெளியாகிறது
புதுச்சேரி : புதிய அமைச்சர் மற்றும் மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்கள் வரும் 2ம் தேதி பதவி ஏற்கின்றனர். இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிடுகிறது.புதுச்சேரியில் கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த பா.ஜ., அமைச்சர் சாய்சரவணன் குமுார், நியமன எம்.எல்.ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கடந்த 27ம் தேதி ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக, பா.ஜ., மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான், ராஜசேகர் ஆகியோர் நியமன எம்.எல்.ஏ., பதவிக்கு, கவர்னர் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்பட்டியலை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தும் புதிய நியமன எம்.எல்.ஏ.,க்கள் நியமனம் குறித்த அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக தலைமை செயலருக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து சபாநாயகர் செல்வம், மூவருக்கும் பதவி பிரமாணம், உறுதிமொழி செய்து வைக்கின்றார்.இதேபோல், அமைச்சர் சாய்சரவணன்குமார், அமைச்சர் பதவி ராஜிநாமா செய்ததை தொடர்ந்து, ஜான்குமார் எம்.எல்.ஏ.,வை அமைச்சர் பதவிக்கு, முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்து, கவர்னருக்கு கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தை கவர்னர் கைலாஷ்நாதன், மத்திய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.புதிய அமைச்சர் பதவி நியமனம் தொடர்பாக இன்று 30ம் தேதி மதியத்திற்கு மேல் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தர உள்ளது. எனவே, புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் குறித்த அரசாணை வெளியானதும், பதவி ஏற்பு விழா 2ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அமைச்சர் பதவியேற்று கவர்னர் மாளிகையிலும், தொடர்ந்து சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், பதவி ஏற்பு நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
பா.ஜ., தலைவராகிறார்
ராமலிங்கம்புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் பதவிக்கு நேற்று மனு தாக்கல் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம் காலை 11;24 மணிக்கு, மாநில தேர்தல் நடத்தும் அதிகாரி அகிலன், இணை தேர்தல் அதிகாரி வெற்றிச்செல்வனிடம் மனு தாக்கல் செய்தார். வேறு எவரும் மனு தாக்கல் செய்யாததால், ராமலிங்கம் மாநில தலைவராவது உறுதியாகி உள்ளது.இதற்கான அறிவிப்பு இன்று நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் அறிவிப்பை தொடர்ந்து பதவியேற்பு விழா நடக்கிறது.