வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இனிமேலாவது இந்த அரசு விழித்துக்கொள்ளட்டும்
புதுச்சேரி: புதுச்சேரியில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை,'ஒருமுறை அனுமதி' அளித்து ஒழுங்குப்படுத்தும் திட்டத்தைஅரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.புதுச்சேரி முழுதும் விதிமீறல் கட்டடங்கள் அதிக அளவில் இருக்கின்றன. பார்க்கிங் இல்லாத கட்டடங்கள், இரண்டு தளங்களுக்கு அனுமதி வாங்கி விட்டு, பல தளங்களுக்கு மேல் கட்டுவது என்று பல்வேறு விதிமுறை மீறல்கள் இருக்கின்றன. இதுபோன்ற விதிமுறை மீறல் கட்டடங்களை ஒருமுறை வாய்ப்பளித்து ஒழுங்குப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விதிமுறைகளை நகர அமைப்பு குழுமம் உருவாக்கியுள்ளது. ஆன்லைன்
விதிமுறை மீறல் கட்ட டங்களை வரைமுறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கட்டட உரிமையாளர்கள் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் சான்றிதழ்களுடன் அனைத்து கட்டட ஆவணங்களையும் இணைத்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டடத்தின் உயரம் 17 மீட்டருக்கு மேல் இருந்தாலும், பள்ளி, சினிமா தியேட்டர், நிகழ்ச்சி அரங்கங்கள் உள்ளிட்டவை 500 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேல் இருந்தால், தீயணைப்பு துறை, விமான நிலைய ஆணையத்திடம் என்.ஓ.சி., பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்
தரைத்தளம், ஒரு மேல்தளத்துடன் கூடிய விதிமுறை மீறல் கட்டடங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் விண்ணப்ப கட்டணம், இதர கட்டடங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பி.பி.ஏ., உறுப்பினர் செயலர் பெயருக்கு மின்னணு முறையில் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் திரும்பி தரப்படாது. இது தவிர தரைத்தளம், ஒரு மேல்தளத்துடன் கூடிய விதிமுறை மீறல் கட்டடங்களுக்கு கூர்ந்தாய்வு கட்டணமாக சதுர மீட்டருக்கு 20 ரூபாய், இதர கட்டடங்களுக்கு சதுர மீட்டருக்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கூர்ந்தாய்வு கட்டணமும் திருப்பி தரப்படாது.தவிர விதிமுறை மீறல் கட்டணமாக சாதாரண கட்டடங்களுக்கு சதுர மீட்டருக்கு 750 ரூபாய், சிறப்பு கட்டடங்களுக்கு 1,000 ரூபாய், பல அடுக்கு கட்டடங்களுக்கு 1,500 ரூபாய் செலுத்த வேண்டும். எந்த கட்டடங்களுக்கு பொருந்தாது
கடந்த 01.05.1987ம் ஆண்டிற்கு முன் கட்டடப்பட்ட கட்டடங்களை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வரைமுறைப்படுத்த முடியாது. 37 ஆண்டுகளை கடந்த இக்கட்டங்கள் பலவீனமாக இருக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு கமிட்டி
விதி மீறல் கட்டடங்கள் சம்பந்தமாக விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டதும், விண்ணப்பங்களை ஆராய்ந்து விதிமுறை மீறல் கட்டடங்களை அனுமதி அளிக்கும். இதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு 500 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது.இந்த நிதி, முதலீட்டு நிதியாக தனியாக பராமரிக்கப்பட உள்ளது. இந்த நிதி உட்கட்டமைப்பினை மேம்படுத்தப்படுத்த மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சி துறை செயலர், காரைக்காலில் கலெக்டர், ஏனாம், மாகியில் மண்டல நிர்வாகிகள் தலைமையில் உட்கட்டமைப்பு கமிட்டியும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.நகர அமைப்பு குழுமம் அனுமதி இல்லாமல் கட்டடங்களை கட்டக் கூடாது என்று பல முறை அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தாலும், புற்றீசல்போல் வீதிமுறை மீறல் கட்டடங்கள் அதிகரித்துவிட்டன.இதனால் ஐகோர்ட் உத்தரவின்படி ஒருமுறை மட்டும் வாய்ப்பு அளித்து முறைப்படுத்திவிட்டு, அடுத்து அனுமதி இல்லாமல் கட்டடப்படும் கட்டடங்களுக்கு கிடுக்கிபிடி உத்தரவுகளும் பிறப்பிக்க நகர அமைப்பு குழுமம் முடிவு செய்துள்ளது.
இனிமேலாவது இந்த அரசு விழித்துக்கொள்ளட்டும்