அரசு இடங்களை யாரும் வாங்கிவிட முடியாது அமைச்சர் நமச்சிவாயம் காட்டம்
புதுச்சேரி : சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது ஏ.எப்.டி., பாரதி, சுதேசி மில் பிரச்னை எழுந்தது.இந்த இடங்களில் ஐ.டி,. பார்க் - ஜவுளி பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.அப்போது அசோக்பாபு எம்.எல்.ஏ., எது செய்வதாக இருந்தாலும் உடனடியாக செய்துவிடுங்கள். ஏனெனில் புதுச்சேரியில் அரசு இடங்கள் சும்மா கிடப்பாக பலரும் நினைக்கின்றனர். ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து, ஓட்டலை என்கிட்ட கொடுத்து விடுங்கள் என்கிறார்; மற்றொருவர் மில்களை என்கிட்ட கொடுத்து பாருங்க என்கிறார். அப்புறம் ஆட்சியை என்னிடம் கொடுத்து விடுங்க என்று சொல்லிவிடுவார்கள். இதனை கேட்டதும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மேசையை தட்டி வரவேற்றனர். வேறு விஷயங்களில் நாங்கள் முரண்பட்டாலும் இந்த விஷயத்தில் பா.ஜ., கருத்துடன் ஒத்துபோகிறோம் என்றதும் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.அதை தொடர்ந்து எழுந்த அமைச்சர் நமச்சிவாயம், அப்படி அரசுக்கு சொந்தமான இடத்தையும், ஓட்டல்களையும் யாரும் வாங்கிவிட முடியது. ஒரு சிவப்பு ரேஷன் கார்ட்டிற்கே இவ்வளவு கேட்கிறோம். அரசு இடங்களை அப்படி கொடுத்துவிட முடியுமா என, பதிலளித்தார்.