தமிழக வட மாவட்டங்களுக்கு என்.ஆர்.காங்., குறி: பா.ம.க., - த.வா.க., கட்சிகள் கலக்கம்
புதுச்சேரி: தமிழகத்தின் வட மாவட்டங்களில், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடகுறி வைத்துள்ள என்.ஆர்.காங்., கட்சி, திரை மறைவில் காய்களை நகர்த்தி வருகிறது.காங்., கட்சியிலிருந்து விலகிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதி அகில இந்திய நமது ராஜ்ஜியம் என்ற பெயரில், என்.ஆர்.காங்., கட்சியை ஆரம்பித்து, ஆட்சியமைத்தார். தற்போது, புதுச்சேரியில் இரண்டாவது முறையாக என்.ஆர்.காங்., பா.ஜ., வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி செய்து வருகிறது.வரும் சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., கட்சி தமிழகத்திலும் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி அறிவித்தார். இது என்.ஆர்.காங்., தொண்டர்களையும், தமிழகத்தில் உள்ள அவரது விசுவாசிகளையும் உற்சாகமடைய செய்துள்ளது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், இன்னும் 12 சட்டசபை தொகுதிகளுக்கு, அந்த கட்சியில் நிர்வாகிகளை நியமிக்க வேண்டியுள்ளது.இந்த பணி முடிந்ததும், புதுச்சேரி, காரைக்காலையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில், மாநில பொறுப்பாளர்களை தேர்வு செய்ய 9 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வன்னியர்கள் அதிகம் உள்ள தொகுதிகளை என். ஆர்.காங்., குறி வைத்து, போட்டியிட காய் நகர்த்தி வருகின்றது. குறிப்பாக, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, வேலுார் மாவட்டங்களில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறது.புதுச்சேரியில் என்.ஆர்.காங்., பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில், நடிகர் விஜயின் த.வெ.க., வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடலாம் என்பதே என்.ஆர்.காங்., கட்சியின் கணக்காக உள்ளது. என்.ஆர்.காங்., நிர்வாகிகளும், ரங்கசாமியுடன் இதனை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே த.வெ.க.,வுடன் இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகளும் விரைவில் துவங்க உள்ளது. பின்னடைவு
தமிழகத்தின் வன்னியர்கள் அதிகமுள்ள வட மாவட்டங்களில், பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சிகளுக்கு செல்வாக்குள்ளன. இந்த சூழ்நிலையில், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ரங்கசாமியுடன் த.வெ.க., கூட்டணி வைத்து களம் இறங்க திட்டமிட்டுள்ளதால், பா.ம.கவும், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும் பின்னடைவு ஏற்படலாம். எனவே, அக்கட்சிகள் புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,கட்சிக்கு எதிராக தீவிர அரசியலை முன்னெடுக்க உள்ளன. இதேபோல், பிற கட்சிகளில் அதிருப்தியில் உள்ள முக்கிய பிரமுகர்களை, தொழிலதிபர்களையும் இழுத்து, தமிழகத்தின் வட மாவட்டங்களில் வேட்பாளராக்க என்.ஆர்.காங்., திட்டமிட்டுள்ளது. இதற்கான ரகசிய அசைன்மெண்ட், முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. இப்போதே படையெடுப்பு
வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த முதல்வர் ரங்கசாமிக்கு, பரவலாக தமிழக வட மாவட்டங்களில் அறிமுகம் உள்ளது. அவர்களது வீட்டு விசேஷங்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் ரங்கசாமி செல்ல தவறுவதில்லை. ரங்கசாமி அறிவிப்பினை தொடர்ந்து, தமிழக வட மாவட்டங்களில் பெரும்புள்ளிகள், அவரது விசுவாசிகள் தினமும் உற்சாகத்துடன் புதுச்சேரிக்கு வாகனங்களில் வர துவங்கியுள்ளனர். முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டிலும், டென்னிஸ் மைதானத்திலும் சந்தித்து, கட்சி பொறுப்புகளை கேட்டு வருகின்றனர்.முதல்வர் ரங்கசாமிக்கு பிடித்தமான கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமிக்கு கோவிலும் சென்று, கட்சி பொறுப்பு கேட்டு, வேண்டுதல் வைத்துவிட்டு செல்வதால், தமிழக அரசியல் களத்துடன், புதுச்சேரி அரசியல் களமும் சூடேறியுள்ளது.