உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாமி வரம் கொடுத்தாலும் தடுக்கும் அதிகாரிகள்

சாமி வரம் கொடுத்தாலும் தடுக்கும் அதிகாரிகள்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எளிமையாக பழகக் கூடியவர். அனைத்து தரப்பு மக்களும் ரங்கசாமியை எளிதாக சந்தித்து குறைகளை கூற முடியும். மருத்துவ சிகிச்சைக்காக ஜிப்மர் வரும் ஏராளமான வெளிமாநில மக்கள், முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து பண உதவி பெறுவது வழக்கம். இதுபோல் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள், முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து மருத்துவ உதவிக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து உதவி பெறுவர். முதல்வரும் ஏழை எளிய மக்களின் கஷ்டத்தை கேட்டு அதற்கு ஏற்ப நிவாரண உதவி அளிக்க பரிந்துரை செய்து அனுமதி கொடுப்பார். சட்டசபை அமைச்சரவை அலுவலகத்திற்கு செல்லும் மனுவை, அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என கூறி கிடப்பில் வைத்து விடுகின்றனர். உயர் அதிகாரிகள் யாரேனும் சிபாரிசு செய்தால் மட்டுமே உடனடியாக நிவாரண உதவி கிடைக்கும். இல்லையென்றால் நிதி இல்லை என மாத கணக்கில் கிடப்பில் வைத்து விடுவர். எம்.எல்.ஏ., க்கள் சிபாரிசு இன்றி நேரடியாக முதல்வரிடம் நிவாரண உதவிக்கு அனுமதி பெற்றதால், மனுவை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என கூறி ஏழை எளிய மக்களை அலைக்கழிக்கின்றனர். விசாரணை என்ற பெயரில் 'மாமூலான' பணியில் ஈடுபடுகின்றனர். முதல்வர் ரங்கசாமி நிதி உதவி பெற அனுமதி (வரம்) கொடுத்தாலும், அதனை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் முட்டு கட்டை போட்டு தடுப்பதாக ஏழை மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ