மின்கட்டண உயர்வை திரும்ப பெற ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
புதுச்சேரி: மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தி உள்ளார். வீடுகளுக்கான மின் கட்டணம் முதல் 100 யூனிட்டிற்கு ரூ. 2.70ல் இருந்து ரூ.2.90 ஆகவும், 101 முதல் 200 யூனிட்டிற்கு ரூ.3.25ல் இருந்து ரூ. 4 ஆகவும், 201 முதல் 300 யூனிட்டிற்கு ரூ. 5.40ல் இருந்து ரூ.6 ஆகவும், அதற்கு மேற்பட்ட யூனிட்டிற்கு ரூ.6.80ல் இருந்து ரூ.7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்நிலையில், மின் கட்டணத்துடன் தேவையில்லாத கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் பல தொழிற்சாலைகள் பல கோடி ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்துவிட்டு, அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன. அவர்களிடம் இருந்து நிலுவை கட்டணத்தை வசூலித்தாலே, பொதுமக்களுக்கு சுமையாக மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.