ஆன்லைனில் பார்ட் டைம் வேலை 2 பேரிடம் ரூ. 83 ஆயிரம் அபேஸ்
புதுச்சேரி: பகுதி நேர வேலையாக 2 பேர் ஆன்லைனில் ரூ. 83 ஆயிரம் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளனர்.முத்திரையர்பாளையத்தை சேர்ந்த நபரை, தொடர்பு கொண்ட மர் மநபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பிய அவர் மர்மநபருக்கு, 53 ஆயிரம் ரூபாய் அனுப்பி, கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடித்தார்.பின், அதன்மூலம் கிடைத்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், காரைக்கால், திருநள்ளாரைச் சேர்ந்த நபர் 30 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளார். அரியாங்குப்பத்தை சேர்ந்த நபர் ஒருவர், ஆன்லைனில் 24 ஆயிரம் ரூபாய்க்கு சி.பி.எஸ்.இ., பாடப்புத்தகம் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த புத்தகம் இதுவரையில் வரவில்லை. வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த நபர் 20 ஆயிரம், வில்லியனுாரைச் சேர்ந்த நபர் 3 ஆயிரத்து 800 என, மொத்தம் 5 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 800 ரூபாய் இழந்துள்ளனர். புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.