| ADDED : ஜன 03, 2024 12:37 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் அரையாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவ - மாணவியர் ஆர்வமுடன் வருகை தந்தனர்.புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு, கடந்த டிச., 22ம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து, டிச., 23ம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு தின விடுமுறை என அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகள் கடந்த, 10 நாட்களாக இயங்கவில்லை.இந்நிலையில் விடுமுறை முடிந்து, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்து பள்ளிகளும் நேற்று காலை திறக்கப்பட்டன. சில தனியார் பள்ளிகள் மட்டும், இன்று திறக்கப்பட உள்ளன. இதேபோல, காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளும், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட்டன. 2024ம் ஆண்டின் முதல் வகுப்பு நாளான நேற்று, மாணவ - மாணவியர் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.