சீமான் மீது நடவடிக்கை கோரி எதிர்க்கட்சித் தலைவர் மனு
புதுச்சேரி : அரசியல் சுய லாபத்திற்காக மலிவான அரசியலை செய்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சீமான் மீது சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, எதிர்க்கட்சித்தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில், தி.மு.க., நிர்வாகிகள், சீனியர் எஸ்.பி., கலைவாணனை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அதில், ஈ.வெ.ரா., பேசியதாக சீமான் குறிப்பிட்டு பேசிய அனைத்தும் ஆதாரமற்ற பொய். ஈ.வெ.ரா எந்த ஒரு இடத்திலும் அவர் குறிப்பிட்டதை போல, பேசியதோ எழுதியதோ இல்லை என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன.சீமான் தனது அரசியல் சுய லாபத்திற்காக மலிவான அரசியலை செய்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் செயல்படுகிறார். திராவிட கொள்கைகளுக்கு வித்திட்டவரை இழிவுபடுத்தி பேசுவதை ஒருநாளும் ஏற்க மாட்டோம்.ஈ.வெ.ரா., வை அவமதிப்பது, ஒட்டு மொத்த தமிழர்களை அவமதிப்பதாகும். தமிழகத்தில் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஸ்டாலின் ஆகிய ஐம்பெரும் முதல்வர்களுக்கு வழிகாட்டியான ஈ.வெ.ரா வை இழிவு செய்தவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.