புதுச்சேரிக்கு ரூ.600 கோடி நிதி எதிர்க்கட்சி தலைவர் சிவா கோரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரிக்கு 600 கோடி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என, மத்திய குழுவிடம் எதிர்க்கட்சி தலைவர் சிவா கோரிக்கை வைத்தார்.'பெஞ்சல்' புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய புதுச்சேரி வந்த மத்திய குழுவினரை, எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் சந்தித்து அளித்த மனு;புதுச்சேரி மாநிலம் கடந்த, 15 ஆண்டுகளாக இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த, 2008,ல் 'நிஷா' புயலுடன் தொடங்கி கடந்த, 2011-ல் 'தானே' புயல் மூலம் தனது கோரத்தாண்டவத்தை புதுச்சேரியில் அரங்கேற்றியது.அதன் பிறகு நீலம், மடி, வர்தா, ஒக்கி, கஜா, நிவர், தற்போது 'பெஞ்சல்' புயல் என தொடர்ந்து இயற்கை பேரிடரை புதுச்சேரி சந்தித்து வருகிறது. இயற்கை பேரிடரின் போது உதவிக்கரம் நீட்ட வேண்டிய மத்திய அரசு கடந்த காலங்களில் உதவாமல் புதுச்சேரியை புறக்கணித்தது.தற்போது அதுபோல் இல்லாமல் தாராளமாக நிதி அளித்து பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களின் கண்ணீரை துடைக்க வேண்டும். அரசு கோரியுள்ள நிவாரண நிதியான ரூ. 600 கோடியை உடனடியாக அளித்து புதுச்சேரி பகுதியை மீட்டெடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.