மக்களுக்கான போராட்டம் தொடரும் எதிர்க்கட்சி தலைவர் சிவா பேட்டி
புதுச்சேரி: 'சட்டசபையில் இருந்து வெளியேற்றினாலும் மக்களுக்கான எங்கள் போராட்டம் தொடரும்' என எதிர்க்கட்சி தலைவர் சிவா கூறினார். சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் சுகாதாரமற்ற குடிநீரால் 6 பேர் இறந்துள்ளனர். எத்தனை பேர் பாதித்துள்ளனர் என்பதை அரசு வெளியிடவில்லை. பாதித்தவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவில்லை. ஆறுதல்கூட கூறவில்லை. சுகாதாரமான, தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் கூறப்பட்ட ஊசுட்டேரி மற்றும் ஆற்றுப்படுகை குடிநீர் திட்டங்கள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மிகப் பெரிய முறைகேடு, ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சுமத்தினோம். அதற்கும் இந்த அரசிடமிருந்து பதில் இல்லை. மின்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். அதானி துறைமுகத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும். தொழில் வளர்ச்சியை மேம்படுத்த புதிய தொழில் கொள்கை சலுகை அடிப்படையில் உருவாக்கப்படும் என்றார்கள். அப்படி ஏதும் அறிவிப்பு செய்து அதன் மூலம் புதிய தொழிற்சாலை ஏதும் புதுச்சேரிக்கு வரவில்லை. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் வழங்கப்பட்ட ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் மக்களுக்கு பயனில்லை. புதுச்சேரி அரசு சார்பில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் கூறினார். அதுவும் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொதுமக்களின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 15 ஆயிரம் ரூபாய், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் போன்ற இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் உரிய நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மூலம் விவசாயிகளுக்காக செலுத்தப்படும் காப்பீட்டு தொகை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முழுமையாக போய் சேராமல், காப்பீடு நிறுவனம் சாப்பிடும் நிலை உள்ளது. இந்த பிரச்னைகள் குறித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் விவாதிக்க சட்டசபையை குறைந்தது 5 நாட்கள் நடத்த வேண்டும் என்றோம். ஆனால், சபாநாயகர் பா.ஜ., கட்சிக்காரர்போல் செயல்பட்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் எங்களை வெளியேற்றியுள்ளார். இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது. சட்டசபையில் இருந்து வெளியேற்றினாலும், மக்களுக்கான எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு சிவா எம்.எல்.ஏ., கூறினார்.