பா.ஜ., அரசுக்கு ஊதுகுழலாக இருக்கும் எதிர்க்கட்சிகள் நேரு எம்.எல்.ஏ., சாடல்
புதுச்சேரி : மும்மொழி கல்விகொள்கையை அமல்படுத்தினால் நிதி கொடுப்போம் என, ஆணவமாக பேசும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு கண்டிக்கதக்கது என, நேரு எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மத்திய அரசு, கல்வியை மாநில பட்டியலில் இருந்து பிரித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அந்தந்த மாநில மக்களின் மனதை புரிந்துகொள்ளாமல் வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.புதுச்சேரியில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் ஏனோதானோ என்று சி.பி.எஸ்.இ., என்ற பாடத்திட்டத்தை அமல்படுத்தியதால் மாணவர்கள் புரிதல் இல்லாமல் அரசு பள்ளிகளில் படித்து கொண்டிருக்கிறார்கள்.ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி இல்லாததால் அவர்கள் மூலம் கல்வியறிவு பெறும் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் தேர்ச்சி சதவீதம் குறையும் நிலை உள்ளது. அரசு பள்ளிகளில் அந்தந்த பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்கள் இல்லாமல், ஒரு ஆசிரியர் இரண்டு. மூன்று பள்ளிகளுக்கு சென்று பாடம் எடுக்கும் அவலநிலை புதுச்சேரியில் அரங்கேறி வருகிறது. இதனை எதிர்க்கட்சியாக செயல்படுபவர்கள் கையில் எடுத்து போராடாமல் பா.ஜ., அரசுக்கு ஊதுகுழலாக இருக்கின்றனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.