காகிதம் இல்லா சட்டசபை தயார்; சபாநாயகர் செல்வம் ஆய்வு
புதுச்சேரி : புதுச்சேரியில் 30 எம்.எல்.ஏ., 3 நியமன எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். புதுச்சேரி சட்டசபையை காகிதம் இல்லா சட்டசபை யாக மாற்றப்படும் என, சபாநாயகர் செல்வம் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரி சட்டசபையை காகிதம் இல்லா சட்டசபையாக மாற்ற மத்திய அரசு ரூ. 8.06 கோடி நிதி அளித்தது.அதன் மூலம் சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரின் இருக்கை முன்பும் நவீன கையடக்க ஆப்பிள் டேப், வைபை வசதியுடன் வழங்கப்பட்டு உள்ளது. அதன் செயல்பாடுகள் குறித்து சபாநாயகர் செல்வம், சட்டசபை செயலர் தயாளன் ஆய்வு செய்தனர்.சபாநாயகர் செல்வம் கூறுகையில், 'மத்திய அரசின் மானிய திட்டத்தின் மூலம் காகிதம் இல்லா சட்டசபை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பரிச்சார்த்த முறையில் இன்று 12ம் தேதி சோதனை ஓட்டம் நடக்கிறது. முதல்வர் துவக்கி வைக்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடரில் முழுமையாக செயல்படும் என, கூறினார்.இதுவரை நடந்த சட்டசபை கூட்ட தொடர் பதிவுகளில் உள்ள அனைத்து கேள்வி, பதில்களும் அதில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. சட்டசபை இன்று கூட உள்ளதால், சட்டசபை வளாகம் முழுதும் துாய்மை செய்து, பூச்செடிகளால் அலங்காரம் செய்துள்ளனர்.