உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு

உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு

புதுச்சேரி: உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் முழுநேர தினக்கூலி ஊழியர்களுக்கு, 7-வது மத்திய ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய திருத்தம் செய்வதற்கான அரசாணையை உள்ளாட்சித் துறை செயலகம் வெளியிட்டுள்ளது. புதுச்சேரி நிர்வாகத்தின் கீழ் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த ஊதிய உயர்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய திருத்தம் 01.01.2016 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, முழுநேர தினக்கூலிப் பணியாளர்களுக்கு 2.10.2018 முதல் பணப்பலன்களுடன் இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. திருத்தப்பட்ட தினக்கூலி விவரம்:: அரசாணையின் இணைப்பில் பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட தினக்கூலி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரிவு –1ன் கீழ் வரும் அலுவலக உதவியாளர், துப்புரவு தினக்கூலி பணியாளர், காவலாளிஉதவியாளர், பராமரிப்பாளர், கேங்மேன், நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் ஆகியோருக்கு 1.01.16 முதல் 30.06.18 வரை பழைய ஊதியமாக 431 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இது திருத்தப்பட்டு 1.01.16 முதல் ரூ. 600 ஆகவும், 1.07.16 முதல் ரூ. 612 ஆகவும், 1.01.17 முதல் ரூ.624 ஆகவும், 1.07.17 முதல் ரூ.630 ஆகவும், 1.01.18 முதல் ரூ.642 ஆகவும், 1.07.18 முதல் 01.10.18 வரை ரூ.654 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிவு –4ன் கீழ் வரும் எழுத்தர் மற்றும் பில் கலெக்டர் கிரேடு–3 ஆகியோருக்குப் பழைய ஊதியமான ரூ.584-க்குப் பதிலாக, 1.01.16 முதல் ரூ.633 ஆகவும், 1.07.16 முதல் ரூ.646 ஆகவும், 1.01.17 முதல் ரூ.658 ஆகவும், 1.07.17 முதல் ரூ.697 ஆகவும், 1.01.18 முதல் ரூ.710 ஆகவும், 1.07.18 முதல் 1.10.18 வரை ரூ.723 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பிரிவு –5 -ன் கீழ் வரும் சுருக்கெழுத்தர்களுக்கு பழைய ஊதியமான ரூ.738-க்குப் பதிலாக 1.01.16 முதல் ரூ.850 ஆகவும், 1.07.16 முதல் ரூ.867 ஆகவும், 1.01.17 முதல் ரூ.884 ஆகவும், 1.07.17 முதல் ரூ.893 ஆகவும், 1.01.18 முதல் ரூ.910 ஆகவும், 1.07.18 முதல் 01.10.18 வரை ரூ.927 ஆகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிரிவு–6 -ன் கீழ் வரும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்குப் பழைய ஊதியமான ரூ.838-க்குப் பதிலாக 1.01.16 முதல் ரூ.973 ஆகவும், 1.07.16 முதல் ரூ.993 ஆகவும், 1.01.17 முதல் ரூ.1,012 ஆகவும், 1.07.17 முதல் ரூ.1,022 ஆகவும், 1.01.18 முதல் ரூ.1,041 ஆகவும், 1.07.18 முதல் 1.10.18 வரை ரூ.1,061 ஆகவும் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவும் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாருக்கு பொருந்தாது:: தற்காலிக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள தினக்கூலிப் பணியாளர்களுக்கு இந்த ஊதிய விகிதங்கள் பொருந்தாது. அவர்களின் ஊதியம் தொடர்பாகத் தனி வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை, அரசுக்குச் சுமை ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் சொந்த நிதியிலிருந்து படிப்படியாக வழங்கப்பட வேண்டும். இதற்காக மானிய உதவி நிதி உள்ளிட்ட வேறு எந்த நிதியையும் பயன்படுத்தக் கூடாது என்றும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !