உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பி.சி.எஸ்., பணியிடங்களின் எண்ணிக்கை... அதிகரிக்கப்படுமா?  பதவி உயர்வு கிடைத்தும் அதிகாரிகள் தவிப்பு

 பி.சி.எஸ்., பணியிடங்களின் எண்ணிக்கை... அதிகரிக்கப்படுமா?  பதவி உயர்வு கிடைத்தும் அதிகாரிகள் தவிப்பு

புதுச்சேரி :புதுச்சேரி மாநிலத்தில் பி.சி.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கையை காலத்துக்கேற்ப அதிகரிப்பதற்கான கோப்பு நீண்ட காலமாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் முடிவு எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இக்கோப்பிற்கு அனுமதி பெற்று, பணிகளை வேகப்படுத்த கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வான சிவில் சர்வீஸ் நடத்தப்பட்டு வருகிறது. இதில் புதுச்சேரி சிவில் சர்வீஸ் பணியும் உள்ளடக்கம். புதுச்சேரி சிவில் சர்வீஸ் பணிக்கான, பி.சி.எஸ்., விதிகள் 1967ன்படி உருவாக்கப்பட்டது. அப்போது 62 பதவிகள் உருவாக்கப்பட்டன.ஆனால் 50 ஆண்டுகளாக இந்த விதிகளை திருத்தி, காலத்துகேற்ப மாற்றியமைக்கப்படவில்லை. இதனால் பதவி உயர்வு கிடைத்தும் அந்த பதவிக்கான சம்பளத்தை பெற முடியாமல் பி.சி.எஸ்., அதிகாரிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றன. தற்போது 81 பி.சி.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். இதில் சி.டி.சி., எனப்படும் பொறுப்பு அடிப்படையில் 19 பேர் பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகின்றனர். ஆனால் பதவி உயர்வு கிடைத்தும் கூட அவர்களுக்கு எந்த பணிப்பயனும் இல்லை. சம்பள உயர்வும் இல்லை.

மவுனம்

புதுச்சேரி பி.சி.எஸ்., விதிகளை திருத்துவதற்காக கடந்த 2009-10ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி அரசு சார்பில் கோப்பு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து 2010ல் பிப்ரவரி 18ம் தேதி புதுச்சேரி பி.சி.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கையை 83 ஆக உயர்த்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதலும் தந்தது. இதற்கான விதிமுறைகளை திருத்தம் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே பாக்கி. ஆனாலும் இதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்னும் திருத்தவில்லை. அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதனையடுத்து மீண்டும் 2022ல் புதுச்சேரி அரசு சார்பில், பி.சி.எஸ்., அதிகாரிகளை உயர்த்துவதற்காக அனுமதி பெற கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக மத்திய தேர்வாணையம் கவனத்திற்கு சென்றும் கூட இதுவரை அனுமதி தரவில்லை.

பதவி உயர்வுகளில் தேக்கம்

புதுச்சேரியில் சிவில் சர்வீஸ் பணியை துவங்கும் அதிகாரிகளுக்கு எட்டாண்டு கால பணிக்கு பிறகு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு பெறும் தகுதியை பெறுகின்றனர். இதனால் ஏற்படும் காலியிடங்கள், சீனியாரிட்டி அடிப்படையில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரியாக புதுச்சேரி சிவில் சர்வீஸ் அதிகாரிகள் பதவி உயர் பெறுகின்றனர்.சிவில் சர்வீஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெறும் அடுத்த நிலையில் உள்ள தாசில்தார் உள்ளிட்ட பதவிகளில் காலியிடங்கள் ஏற்படுகிறது. இந்த காலியிடங்களுக்கு அதற்கு அடுத்த நிலையில் உள்ள துணை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது.ஆனால், சிவில் சர்வீஸ் விதிகளை திருத்தி, காலத்துகேற்ப எண்ணிக்கை அதிகரிக்காதது, ஒட்டுமொத்த பதவி உயர்வில், தேக்க நிலையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக கவர்னர், முதல்வர் மத்திய உள்துறை அமைச்சகத்தினை அணுகி விரைவில் அனுமதி பெற வேண்டும் என்பதே பி.சி.எஸ்., அதிகாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எத்தனை அதிகாரிகள்

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது என்ட்ரி கிரேடில் ரெகுலர் பதவியில் 9 அதிகாரிகள் உள்ளனர். அடாக் அடிப்படையில் 44 அதிகாரிகள், சி.டி.சி., அடிப்படையில் 19 அதிகாரிகள் உள்ளனர். இதில் அடாக் பதவி உயர்வு என்பது விதிகளுக்கு உட்பட்டது கிடையாது. இதுமட்டுமின்றி செலக் ஷன் கிரேடு, ஜூனியர் அட்மினிஸ்ட்ரேடிவ் கிரேடு, நான்-பன்ஷனல் கிரேடு என, ஒவ்வொரு கிரேடுலும் தலா 3 பேர் வீதம் 9 பேர் பணியாற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை