உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரண்டு வாரங்களாகியும் வடியாத மழைநீர் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவிப்பு

இரண்டு வாரங்களாகியும் வடியாத மழைநீர் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியை சுற்றி உள்ள கிராமப்பகுதிகளில் 'பெஞ்சல்' புயலை தொடர்ந்து உருவான வெள்ள பாதிப்பால், அப்பகுதி மக்கள் இன்னமும் அவதிப்பட்டு வருகின்றனர்.வங்கக்கடலில் உருவான 'பெஞ்சல்' புயலால், புதுச்சேரியில் கடந்த நவ., 30ம் தேதி, காலை முதல் மாலை வரை கன மழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத வகையில், ஒரே நாளில், 50 செ.மீ., மழை பதிவானது. தொடந்து 5ம் தேதி வரை மழை நீடித்தது. இதனால் புதுச்சேரி நகரப்பகுதி மட்டுமின்றி, சுற்று வட்டார கிராமப்பகுதிகளும் ஒட்டு மொத்தமாக வெள்ளத்தில் மிதந்தன.தொடர்ந்து சாத்தனுார் அணை திறப்பால், தென்பெண்ணை மற்றும் மலட்டாற்றிலும், வீடுர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து தடைபட்டது.தண்ணீரில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. பாகூர், முள்ளோடை, கொம்மன்தான் மேடு, பரிக்கல்பட்டு, பாகூர், இருளன்சந்தை, சோரியாங்குப்பம், குருவிநத்தம், மணமேடு, பனையடிக்குப்பம், பண்டசோழநல்லுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.மழை பெய்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் கரிக்கலாம்பாக்கம், செல்வவிநாயகர் நகரில், மழைநீர் இன்னமும் வடியவில்லை. அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள நிலங்களிலும் மழைநீர் வடியாமல் உள்ளது.ஆத்துவாய்க்கால் பேட், பாத்திமா நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடியாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.சாலையில் தேங்கிய மழைநீர் மற்றும் சேற்றை கடந்து மிகுந்த சிரமத்திற்கு பிறகே, பிரதான சாலைக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் கார்கள் மற்றும் டூ-வீலர்களை பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலை தான் வில்லியனுார், சுல்தான்பேட்டை குடியிருப்பு பகுதிகளிலும் நீடித்து வருகிறது. இதனால், அப்பகுதிகளில் தொற்று நோய் அபாயம் அதிகரித்துள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை