புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையின் இருபுறமும் மீண்டும் குப்பைகளை கொட்டிய கும்பல் அட்டூழியம் செய்து வருகிறது. இந்த கும்பலின் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதம் விதிக்க வேண்டும். புதுச்சேரி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏற்படுத்தப்பட்ட அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை, அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது குப்பை மேடாக மாறியுள்ளது. இரவோடு இரவாக கட்டட இடிபாடு கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளை லாரி, டிராக்டர்களில் கொண்டு வந்து புறவழிச்சாலையின் இருபுறமும் கொட்டிவிட்டு செல்கின்றனர். இந்த பிளாஸ்டிக் குப்பைகள் காற்றில் பறந்து வாய்க்காலில் விழுந்து உழந்தை ஏரி, வேல்ராம்பட்டு ஏரிக்கு செல்வதால், இரு ஏரிகளுக்கும் சுற்றுச் சூழல் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலையும், நீர்நிலையும் மாசுபடுத்தும் இந்த கும்பல் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த கும்பலை பார்த்து பலர் தற்போது, துணிச்சலாக கழிவுகள், குப்பைகளை பகலிலேயே கொண்டு வந்து புறவழிச்சாலையில் கொட்ட துவங்கியுள்ளனர். இப்படியே போனால் புறவழிச்சாலையின் இருபுறமும் குப்பை மேடாக மாறிவிடும் அபாயம் உள்ளது. அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை, நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் குப்பை கொட்டுவோர் மீது நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கட்டும் என்று நகராட்சி அதிகாரிகள் அமைதியாக உள்ளனர். ஆனால் இடத்தின் உரிமையாளரான நெடுஞ்சாலை அதிகாரிகள், அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. புறவழிச்சாலையில் குவியும் குப்பை குறித்த புகாரை தொடர்ந்து அண்மையில், புதுச்சேரி நகராட்சியும், உழவர்கரை நகராட்சியும் பல மணி நேரம் செலவிட்டு சாலையில் இருபுறமும் சுத்தம் செய்ததோடு, மண்ணையும் அழகாக சமப்படுத்தினர். ஆனால், மறுநாளே எவ்வித பயமின்றி, சுத்தம் செய்த இடத்திலேயே குப்பையை கொட்டி அலங்கோலமாக்கிவிட்டு சென்றுள்ளனர். இந்த குப்பை பல ஆண்டுகள் ஆனாலும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளாகும். புறவழிச்சாலையை குப்பை மேடாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவினை மீறி நீர்நிலை அருகில் குப்பை கொட்டுவதை அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது. எந்த நிறுவனமாக இருந்தாலும், குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், சட்ட விரோதமாக புறவழிச்சாலையில் குப்பை கொட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலை துறைக்கு என்ன தயக்கம்... சுற்றுச்சூழல் பாதிப்பினை ஏற்படுத்தும் கும்பலை போலீசாரும், சுற்றுச்சூழல் அதிகாரிகள் கூட கண்டும் காணாமல் இருப்பது ஏன். இப்படி ஒவ்வொரு துறையும் தனது பொறுப்பினை தட்டிக் கழித்து கொண்டே போனால் இந்த சட்ட விரோத கும்பலுக்கும், குப்பை மேட்டிற்கும் யார் தான் மணி கட்டுவது... இது புறவழிச்சாலையா... அல்லது குப்பை மேடா... பொறுப்பே இல்லாமல் சட்ட விரோத செயலை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் அரசு துறைகள் செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி நேரடியாக தலையிட வேண்டும். புறவழிச்சாலையில் குப்பை கொட்டும் கும்பலை பிடிக்க நெடுஞ்சாலை, போலீஸ், புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சி, சுற்றுச்சூழல் அடங்கிய தனிப்படை அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த சட்ட விரோத கும்பலின் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். இல்லையெனில் புறவழிச்சாலை கண் முன்னே குப்பை மேடாகாக மாறுவதை அரசு வேடிக்கை தான் பார்க்க வேண்டி இருக்கும்.