உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் அருகே 4 வழிச்சாலையில் பிணத்துடன் மறியல்

வில்லியனுார் அருகே 4 வழிச்சாலையில் பிணத்துடன் மறியல்

முதல்வர் காரை மறிக்க முயற்சித்ததால் பரபரப்பு புதுச்சேரி: வில்லியனுார் அருகே நான்கு வழிச்சாலையில் பிணத்துடன் மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்கள், முதல்வர் காரை மறிக்க முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை, புதுச்சேரியின் திருபுவனை, மங்கலம், கோர்காடு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக வழியாக செல்கிறது. இந்நிலையில் மங்கலம் தொகுதிக்குட்பட்ட பெருங்களூர், தனத்துமேடு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.விவசாய பணிகளுக்கும், இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட சாலை துண்டித்து, 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட தேவை, இறந்தவர்கள் உடல்களை 3 கி.மீ., வரை கடந்து சென்று மேம்பாலம் வழியாக சுற்றி சுடுகாட்டிற்கு சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.4 வழிச்சாலையாக துண்டிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிணத்துடன் மறியல் போராட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தும் இதுவரை மாற்று ஏற்பாடு செய்யவில்லை.இந்நிலையில், பெருங்களூர் கிராமத்தை சேர்ந்த காந்தி காமராஜினி என்ற பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மாலை பெருங்களூர் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். 4 வழிச்சாலையில் சென்ற இறுதி ஊர்வலம் திடீரென சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக முதல்வர் ரங்கசாமி மற்றும் அவரது பாதுகாப்பு வாகனம் வந்தது. மறியலில் ஈடுபட்ட மக்கள், காரை மறிக்க முயற்சித்தனர். அதற்குள் போலீசார் போராட்டக்காரர்களை விலக்கி விட்டனர்.அதன்பின்பு பிணத்துடன் 4 வழிச்சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. 1 மணி நேரமாக போராட்டம் நடந்ததால், சப் லெக்டர் மற்றும் போலீசார் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். 4 வழிச்சாலையை கடந்து செல்லாமல், உள்ளூரிலே பொதுவான இடம் தேர்வு செய்து 10 நாட்களில் புதிய சுடுகாடு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.சவ ஊர்வலம் சாலையின் சென்டர் மீடியன் மீது ஏறி சாலையை கடந்து சென்று அடக்கம் செய்தனர். மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் உறுதி அளித்தப்படி நடவடிக்கை எடுக்க தவறினால், 4 கிராம மக்கள் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ