மேலும் செய்திகள்
சதுப்புநிலம் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி
02-Feb-2025
கிள்ளை : உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சதுப்பு நிலங்களை தமிழக அரசு அறிவிக்காவிட்டால், பசுமை தாயகம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பா.ம.க., தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.உலக சதுப்பு நில தினத்தையொட்டி, கடலுார் அடுத்த பிச்சாவரத்தில் பசுமை தாயகம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பா.ம.க., தலைவர் அன்புமணி பங்கேற்றார். அப்போது, தமிழக சதுப்பு நிலங்களை காப்போம். தமிழகத்தின் சதுப்பு நிலங்களை 2017 விதிகளின் கீழ் அறிவிக்கை செய்ய வேண்டும் என்ற பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், படகில் சுரபுண்ணை காட்டுப் பகுதியை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள 42,900 ஏக்கர் சதுப்பு நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். சதுப்பு நிலங்களால் நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு, விவசாயம் செழிக்கிறது. ஆனால் தற்போது, சதுப்பு நிலங்கள் கழிவு நீர் கலந்து வீணாகி வருகிறது.கடந்த 2017ல் இந்திய சதுப்பு நில பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விதிகளின்படி, ஒவ்வொரு மாநிலங்களும் சதுப்பு நிலங்களை கண்டறிந்து வரைமுறை செய்ய வேண்டும். ஆனால் இன்றுவரை தமிழக அரசு ஒரு சதுப்பு நிலத்தை கூட அறிவிக்கை செய்யவில்லை.சென்னை பள்ளிக்கரணையில் சதுப்பு நிலம் 12,500 ஏக்கர் இருந்தது. அது தற்போது, 2,500 ஏக்கராக சுருங்கிவிட்டது. அதிலும் குப்பையை கொட்டி எரித்து கொண்டுள்ளனர். இந்த இயற்கை வளங்கள் பாதித்தால் நமக்கு பல்வேறு பிரச்னைகள் வரும்.எனவே, சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விதிகளின்படி அறிவிக்கை செய்ய வேண்டும். அதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இதை செய்யாவிட்டால் பசுமைத்தாயகம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
02-Feb-2025