காண்ட்ராக்டர் மீது தாக்குதல் 8 பேருக்கு போலீஸ் வலை
பாகூர் : லேபர் காண்ட்ராக்டர் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.கிருமாம்பாக்கம் அடுத்த வாக்கால்ஓடை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் 32; லேபர் காண்ட்ராக்டர். இவர் கடந்த 28ம் தேதி இரவு கண்ணியக்கோவிலில் உள்ள ஓட்டலுக்கு உணவு வாங்க சென்றார்.அப்போது, அந்த ஓட்டலின் வாயிலில் வழி விடாமல் ஒரு கும்பல் ஆபாசமாக பேசி கொண்டிருந்தது. புருஷோத்தமன், அவர்களை வழி விட்டு நில்லுங்கள் என்று கூறி உள்ளார். ஆத்திரமடைந்த கும்பல், புருஷோத்தமனை தாக்கியது.தப்பியோடிய அவரை, துரத்தி சென்ற கும்பல் தடி மற்றும் கல்லால் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. தடுக்க முயன்ற வார்க்கால் ஓடையைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவர் மீதும் அந்த கும்பல் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விட்டு தப்பிச் சென்றது.அந்த கும்பல், புருேஷாத்தமன் வைத்திருந்த 43 ஆயிரம் ரூபாய், இரண்டு சவரன் செயின் ஆகியவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த புருஷோத்தமன், கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த காமேஷ், ரனேஷ், தினகரன், மகிவர்மன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புரு ேஷாத்தமன் மீது தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகிறது.