உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு வெளிநாட்டு பயணிகள் சீசன் களை கட்டுது

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு வெளிநாட்டு பயணிகள் சீசன் களை கட்டுது

புதுச்சேரி : புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. இதன் எதிரொலியாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 9 லட்சத்து 13 ஆயிரத்து 853 பேர் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், வெளிநாடுகளில் இருந்து 73 ஆயிரத்து 412 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். மொத்தம் 9 லட்சத்து 87 ஆயிரத்து 265 சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளனர். இது, கடந்த ஆண்டைவிட, 4 சதவீதம் அதிகமாகும்.வெளிநாட்டுப் பயணிகளைப் பொறுத்தவரை, பிரான்சில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான பயணிகள் வருகின்றனர். புதுச்சேரியின் பிரெஞ்சு கலாசார பின்னணி பிரான்ஸ் நாட்டினரைக் கவர்ந்திழுக்கிறது.ஐரோப்பிய நாடுகளில் வெயில் சீசனான ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும், கடும் குளிர் நிலவும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் புதுச்சேரிக்கு அதிகளவில் வெளிநாட்டுப் பயணிகள் வருகின்றனர். பிரெஞ்சு குடியுரிமைப் பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் பிரான்சில் வசிக்கின்றனர். இவர்கள் தங்களது வீட்டில் தங்கவும், உறவினர்களைப் பார்ப்பதற்கும் ஆண்டுதோறும் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றவர்கள், 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் வரை ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர். பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றவர்கள், பிரான்சில் கோடை விடுமுறையான ஜூலை முதல் ஆகஸ்ட் வரை அதிகளவில் வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர, 25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் பேர் வரை தினமும் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள். மற்றவர்கள் பல்வேறு வேலைகள் காரணமாக வருகின்றனர். அதாவது, தங்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகளைத் தவிர்த்து, ஆண்டுக்கு 1 கோடியே 10 லட்சம் பேர் புதுச்சேரிக்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரிக்கு வரும் இவர்கள் தங்குவதில்லை. சுற்றுலா தலங்களைப் பார்த்துவிட்டு புறப்பட்டுச் சென்று விடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ