தற்கொலைக்கு முயன்ற தம்பதியை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு
வில்லியனுார் : வில்லியனுார் அருகே பத்துக்கண்ணு மதகில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற வயதான தம்பதியால் பர பரப்பு நிலவியது. வில்லியனுார் அடுத்த பத்துக்கண்ணு சதுக்கத்தில் நேற்று மதியம் 12:00 மணியளவில் ஊசுடேரி மதகில் வயதான தம்பதியர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் திடீரென வாய்க்காலில் குதித்தனர். அதனை பார்த்த அப்பகுதியில் நின்றிருந்த பஸ் டிரைவர் அஜய் கூச்சலிட்டார். அவ்வழியாக சென்ற தேத்தாம்பாக்கத்தை சேர்ந்த டாக்குமென்ட் ரைட்டர் முகிலன், உடனே வாய்க்காலில் குதித்து நீரில் மூழ்கிய தம்பதியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வில்லியனுார் போலீசார், தம்பதியிடம் விசாரித்தனர். அவர்கள், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த மாரிதுரை, 83; அவரது மனைவி முத்துலட்சுமி, 74, என, தெரியவந்தது. அவர்களது மகன் ஆனந்து, குடும்பத்துடன் கூடப்பாக்கம் ஆனந்தா நகரில் வசிப்பதும், சில மாதங்களுக்கு முன், கூடப்பாக்கம் வந்து மகன் வீட்டில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு திடீரென உடல் நிலை பாதித்துள்ளது. அவர்களை ஆனந்த், ஊசுடேரி லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கேயே விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு பின், இருவரும் வீட்டிற்கு செல்லாமல் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. அவர்களை, ஆம்புலன்ஸ் மூலம் கதிர்க்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மகனுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவ்வழியாக வந்த வில்லியனுார் தாசில்தார் சேகர், சம்பவத்தை கேள்விப்பட்டு, தம்பதியை காப்பாற்றிய முகிலனை பாராட்டினார்.