தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 46 பேர் காயம்
காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் அருகே இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 46 பயணிகள் காயமடைந்தனர்.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் இருந்து சிதம்பரம் நோக்கி நேற்று காலை தனியார் பஸ் சென்றது. சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது.காலை 9:00 மணிக்கு இவ்விரு பஸ்களும், லால்பேட்டை அடுத்த எள்ளேரி பஸ் நிறுத்தம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பஸ்களின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள், பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த டிரைவர்கள் சிவாயம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ்,34; தியாகராஜன் உட்பட 46 பேரை மீட்டனர்.அவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து காரணமாக சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காட்டுமன்னார்கோவில் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.