| ADDED : ஜன 25, 2024 05:21 AM
புதுச்சேரி : கிராமப்புறங்களில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த பொதுப்பணித் துறை தயாராகி வருகிறது.புதுச்சேரி மாநிலத்திற்கு தினமும் 150 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி.,) குடிநீர் வழங்கப்படுகிறது. அதே அளவுக்கு கழிவு நீரும் சேகரிக்கப்படுகிறது. இதனை சுத்திகரிக்கும் போது 80 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கிறது.புதுச்சேரி பிராந்தியத்தில் இத்தகைய துாய்மை தண்ணீர் தற்போது கனகன் ஏரி, திப்புராயப்பேட்டை, கருவடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இந்த நான்கு சுத்திகரிப்பு மையங்களில் இருந்து தினசரி 70 எம்.எல்.டி., தண்ணீர் துாய்மையான தண்ணீர் கழிவு நீரில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கழிவு நீர் முழுவதும், நகர பகுதியில் பாதாளசாக்கடை திட்டத்தின் மூலம் பெறப்பட்டு சுத்தகரிக்கப்படுகின்றது. ஆனால் கிராமப்புறங்களில் பாதாள சாக்கடை திட்டம் இல்லை. எனவே நீரை சுத்திகரிக்க வழியில்லாமல் நிலத்தடியிலும் நீர் நிலைகளிலும் விடப்படுகிறது. குறிப்பாக மனித கழிவுகளை அகற்றுவது பெரிய சிக்கலாக உள்ளது. இக்கழிவுகள் லாரிகள் மூலம் கொண்டு சென்று நீர்நிலைகள், ஓடைகளில் விடப்படுகிறது.எனவே, கிராமங்களில் பொதுசுகாதார மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த பொதுப்பணித் துறை தயாராகி வருகிறது. கிராமப்புறத்தில் ஒருங்கிணைந்த முறையில் கழிவு நீர் சுத்திகரித்து நிலையம் ஏற்படுத்தி, மனித கழிவுகளை அகற்ற திட்டமிடடுள்ளது. இது தொடர்பாக ஆயத்த பணிகளையும், ஆய்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் மனித கழிவுகள் நீர்நிலைகளில் கொட்டப்படுவது தடுக்கப்படுவதுடன், கிராமபுறங்களின் பொதுசுகாதாரமும் மேம்படும்.இப்படி கழிவு நீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடிக்க கூட உகந்ததாக தான் உள்ளது. இதில் எந்த வித மாற்றத்தையும் பார்க்க முடியாது. கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படும் குடிநீரை விட, கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீர் சுத்தமாகவே உள்ளது.எனவே சுத்தமாக கழிவு நீர் மூலம் கிடைக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கான விரிவான திட்டம் குறித்து பொதுப்பணித் துறை ஆய்வு செய்து வருகின்றது.இந்தியா முழுதும் கையால் மனித கழிவுகளை அகற்றும் பணிக்கும் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. எனவே யாரும், எந்த நிறுவனமும், கழிவுகளை கையால் அகற்றுவதற்கு துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது.இதை மீறுபவர்களுக்கு 2013 சட்டத்தின் 8வது பிரிவுபடி 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என, உத்தரவிட்டுள்ளது. எனவே கிராமப்புறங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமையவதன் மூலம், மனித கழிவு நீர் அகற்றுவதும் முற்றிலும் ஒருங்கிணைந்து மேலாண்மை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.