மறியல் போராட்டம் எதிரொலி; சுடுகாடு இடம் என அறிவிப்பு
அரியாங்குப்பம்; பொதுமக்கள் சாலை மறியல் செய்த சம்பவத்தை தொடர்ந்து, கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட இடம் சுடுகாடு என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.தவளக்குப்பம் அடுத்த ஆண்டியார்பாளையம் காலனி குடியிருப்பவர்களுக்கு சுடுகாடு இல்லாமல் இருந்தது. பொதுமக்கள் கோரிக்கையின் பேரில், நல்லவாடு சாலையில், கடந்த 2009ம் ஆண்டு சுடுகாடு கட்டுவதற்கு, இடத்தை அரசு ஒதுக்கியுள்ளது. சுடுகாடு கொட்டகை மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு, பூமி பூஜையும் போடப்பட்டது.அந்த இடத்திற்கு பக்கத்தில், தனி நபர் ஒருவரின் இடம் உள்ளது. சுடுகாட்டிற்காக ஒதுக்கிய இடத்தை அந்த நபர் ஆக்கிரமித்துள்ளார். அதை கண்டித்து, ஆண்டியார்பாளையம் காலனி மக்கள் நேற்று முன்தினம் தவளக்குப்பத்தில், சாலை மறியல் செய்தனர்.தகவலறிந்த, தாசில்தார், பிரிதீவி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சுடுகாடு இடம் என, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்கு சொந்தமான, ஆண்டியார்பாளையம், காலனி சுடுகாடு இடம் என, அறிவிப்பு பலகை, கொம்யூன் பஞ்சாயத்து மூலம் வைக்கப்பட்டது.