பொதுப்பணித் துறை போராட்டம் வாபஸ்
புதுச்சேரி: பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் தலைவர் சரவணன் விடுத்துள்ள அறிக்கை: பொதுப்பணித்துறை ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகனை நிறைவேற்ற வலியுறுத்தியும், எம்.டி.எஸ்., ஊழியர்களின் ஊதிய இழப்பு நிலுவை தொகையை பெற வேண்டி தொடர் போராட்டங்களை அறிவித்து, நடத்தி வந்தனர். அதன் இறுதி கட்டமாக இன்று 15ம் தேதி, நாளை 16ம் தேதி இரண்டு நாட்கள் ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பெடுத்து கவர்னர் மாளிகை முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருத்தனர். இதையடுத்து, கவர்னரின் தனிசெயளர் முன்னிலையில் அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன், செயல் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் கவர்னரின் தனிசெயலர் 15 நாட்களுக்குள் எம்.டி.எஸ்., ஊழியர்களின் இழப்பு ஊதிய நிலுவைத் தொகையினை வழங்க அரசாணை வெளியிடுவதாக வாக்குறுதி அளித்தார். அதையடுத்து கவர்னர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடத்துவது வாபஸ் பெறப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.