உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பட்ஜெட் முன் தயாரிப்பு பணிகள்... விறு விறு; 3வது வாரத்தில் மாநில திட்ட குழு கூடுகிறது

புதுச்சேரி பட்ஜெட் முன் தயாரிப்பு பணிகள்... விறு விறு; 3வது வாரத்தில் மாநில திட்ட குழு கூடுகிறது

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இம்மாதம் மூன்றாவது வாரத்தில் திட்ட குழு கூடி, பட்ஜெட்டினை இறுதி செய்ய உள்ளது.புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதியில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப் படுகிறது. கடந்த காலங்களில் புதுச்சேரி அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு சரியான நேரத்தில் அனுமதி அளிக்காததால் சிக்கல்கள் ஏற்பட்டன. உரிய நேரத்தில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் சட்டசபை கூட்டமே தள்ளி வைக்கப்பட்ட சூழலும் ஏற்பட்டது.இதற்கிடையில் அடுத்த நிதியாண்டிற்கு இடைக்கால பட்ஜெட்டை கைவிட்டு, முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து துறைகளும் பட்ஜெட் முன் தயாரிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டு, வரவு செலவு விபரங்களை சமர்பித்துள்ளன. இந்த பட்ஜெட் விவரங்கள் அனைத்தையும் பட்ஜெட் பிரிவு, ஆராய்ந்து வருகிறது. பட்ஜெட்டை இறுதி வடிவம் கொடுக்க மாநில திட்டக் குழு இம்மாதம் மூன்றாவது வாரத்தில் கூடுகிறது. இதில் அரசின் வரவு, செலவினங்கள் ஆராயப்பட்டு, பட்ஜெட் தொகை இறுதி செய்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

13 ஆயிரம் கோடி

லோக்சபா தேர்தல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்திற்கு 4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, லோக்சபா தேர்தல் முடிந்ததும் நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் முதல்வர் ரங்கசாமி ஆகஸ்ட் 2ம் தேதி 12,700 கோடி ரூபாய்க்கு பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். மேலும் கடந்த 1.4.2024 முதல் 31.8.2024 வரை 5 மாதங்களுக்கு அரசின் அன்றாட செலவினங்களுக்காக முன்னளி மானியமாக ரூ.5 ஆயிரத்து 187 கோடிக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்தாண்டு 13 ஆயிரம் கோடிக்கு மேல் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த பட்ஜெட்டில் ரூ.10,969.80 கோடி வருவாய் செலவினங்களுக்காகவும், ரூ.1,730.20 கோடி மூலதன செலவினங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மூலதன செலவிற்கும் அதிக நிதி ஒதுக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டு, பட்ஜெட் பணிகளை வேகப்படுத்தி வருகிறது.புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், அதன் வரவு செலவு திட்டம் முழு மதிப்பீடும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டில் சேர்க்கப்படும். மத்திய அரசு பட்ஜெட்டினை பிப்ரவரி 1ம் தேதி சமர்ப்பித்த பிறகே, புதுச்சேரி அரசும் தனது பட்ஜெட்டினை சட்டசபையில் சமர்ப்பிக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி