| ADDED : பிப் 01, 2024 04:44 AM
புதுச்சேரி: கஞ்சா விற்ற ஒடிசா வாலிபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.புதுச்சேரி, சேதராப்பட்டு ஏரிக்கரையில் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி கஞ்சா விற்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சோம்நாத்குண்டு,32; என்பவரை 200 கிராம் கஞ்சாவுடன் சேதராப்பட்டு போலீசார் கைது செய்தனர்.எஸ்.பி., பக்தவச்சலம் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், சோமநாத்குண்டு ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து புதுச்சேரியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் சோம்நாத்குண்டு தங்கியிருந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.அதனைத் தொடர்ந்து தற்போதைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சோம்நாத்குண்டு மீது போதை பொருள் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் விநாயகம் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சோம்நாத்குண்டுவிற்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, ஜாமினில் வெளியே வந்திருந்த சோம்நாத்குண்டுவை போலீசார் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.